கடல் அட்டை பண்ணைகளால் பாதிக்கப்பட்ட கிராஞ்சி சிவபுர மீனவர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு - News View

About Us

About Us

Breaking

Tuesday, October 4, 2022

கடல் அட்டை பண்ணைகளால் பாதிக்கப்பட்ட கிராஞ்சி சிவபுர மீனவர்கள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

(மன்னார் நிருபர்)

பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராஞ்சி சிவபுர மீனவர்கள் இன்று (4) காலை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு யாழ் பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராஞ்சி சிவபுர மீனவ சமூகங்கள் தாங்கள் கடந்த பல நாட்களாக சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடல் அட்டை பண்ணைகளால் சிறு மீன்பிடி கரையோர தொழிலாளர்கள் தமது பாரம்பரிய மீன்பிடி தொழிலை தொடர்ந்து முன்னெடுக்க முடியாது இருப்பதாக தெரிவித்து கடந்த 4 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தமது தொழிலுக்கு இடையூறாக தமது கடல் கரையோரம் முழுவதும் சட்டவிரோதமாக பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இவற்றினை அரச அதிகாரிகள் பொறுப்பு வாய்ந்த திணைக்களங்கள் எந்தவித அக்கறையும் கொள்ளவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்கள் சிலர் இன்று யாழ் மாவட்ட பிராந்திய இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காரியாலயத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

தொடர்ச்சியாக போராட்டத்தை மேற்கொண்டு வருகின்ற நிலையில் அதிகாரிகள் எவரும் தமது இடத்திற்கு வந்து உரிய தீர்வை பெற்றுத்தர முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கிராஞ்சி இலவன்குடா கடற்பகுதியில் கடலட்டை பண்ணை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இலவன் குடா கடற்பரப்பில், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உட்பட கடற்தொழிலாளர்கள் சிறகு வலை தொழிலின் ஊடாக இறால், நண்டு, மீன் போன்றவற்றை பிடிப்பதை அன்றாட வாழ்வாதார தொழிலாக பல ஆண்டுகளாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் அவர்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் தற்போது கடலட்டை பண்ணைகள் அமைக்கும் முயற்சிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இதனை தொடர்ந்து கடற்தொழிலாளர்கள் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பில் சாதகமான முடிவை சம்மந்தப்பட்டவர்கள் வழங்கும் வரை தாம் போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் மனிதாபிமான பணியில் ஈடுபட்டு வருகின்ற மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பிரதிநிதிகள் சனிக்கிழமை (1) மதியம் குறித்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மீனவர்களை நேரடியாக சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போது குறித்த நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ மற்றும் பணியாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது குறித்த மீனவர்களின் பிரச்சினைகளை குறித்த குழுவினர் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில் தமக்காக ஒரு அமைப்பு ஆதரவு வழங்கி வருகின்ற நிலையில் தமது உரிமைகளை வென்றெடுக்க உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டு தமது போராட்ட வடிவை மாற்றி சுழற்சி முறையில் போராட்டத்தை மேற்கொள்ள தீர்மானித்து உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில் 5 வது நாளாக இன்று தமது போராட்டத்தை குறித்த மீனவர்கள் முன்னெடுத்து வருகின்ற நிலையில் மீனவர்களின் பிரதிநிதிகள் சார்பாக ஒரு குழுவினர் இன்று செவ்வாய்க்கிழமை (4) காலை இலங்கை மனித உரிமை ஆணைக்குழு யாழ் பிராந்திய காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment