இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளின் போது இலங்கை அதிகாரிகளும் சர்வதேச சமூகமும் மனித உரிமைகளை முழுமையாக இணைத்துக் கொள்ள வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கை மக்கள் பட்டினி மந்த போசாக்கு மோசமான வறுமை ஆகியவற்றை நோக்கி தள்ளப்படும் நிலையில் சுகாதார வசதிகள் குறித்து கடும் கவலைகள் எழுந்துள்ள நிலையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.
நாங்கள் முழுமையான வீழ்ச்சியை நெருங்கி விட்டோம் - இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் உணவு சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பிற்கான உரிமைகளை பாதுகாப்பது என்ற புதிய அறிக்கையை சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ளது.
இலங்கை மக்கள் கடந்த பல மாதங்களாக கடும் உணவு தட்டுப்பாடுகளால் நெருக்கடியில் சிக்குண்டுள்ளனர். சுகாதார சேவைகளை பெறுவதில் கடும் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர். அதேவேளை மிக அதிகளவு பண வீக்கம் ஏற்கனவே காணப்பட்ட சமத்துவமின்மையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது என பொருளாதார சமூக கலாச்சார உரிமைகள் தொடர்பான சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆராய்ச்சியாளர் சங்கிட்டா அம்பாஸ்ட் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியின் பரந்துபட்ட மனித உரிமை பாதிப்புகளிற்கு இலங்கை அரசாங்கமும் சர்வதேச சமூகமும் வேகமாக தீர்வை காண வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் இந்த நிலை மக்கள் உரிமைகளை பெறுவதை ஈவிரக்கமற்ற விதத்தில் பாதித்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலைமைக்கு தீர்வை காண்பதற்கான முயற்சிகளின்போது இலங்கை சர்வதேச தலைவர்கள் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு எடுக்க வேண்டிய பல நடவடிக்கைகள் குறித்தும் மன்னிப்புச் சபை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சர்வதேச உதவிகளை அதிகரிப்பது முழுமையான சமூக பாதுகாப்பை உறுதி செய்வது கடன்களை இரத்துச் செய்வது உட்பட கடன் நிவாரணம் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் பரிசீலிப்பது போன்ற பரிந்துரைகளை சர்வதேச மன்னிப்புச் சபை முன்வைத்துள்ளது.
ஜூன் மாதத்திற்கும் செப்டம்பர் மாதத்திற்கும் இடையில் 55 பேருடன் நேர்காணல்களில் ஈடுபட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஆபத்தான வேலையில் உள்ள மக்கள் தினசரி கூலித் தொழிலாளர்கள் மீன்பிடித்துறை மற்றும் தோட்டங்களில் பணி புரிபவர்கள் குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய மலைய தமிழர்கள் பொது சுகாதார ஊழியர்கள் சிவில் சமூக குழுக்கள் மனிதாபிமான அமைப்புகள் சர்வதேச தொண்டு நிறுவனங்கள் தனிப்பட்ட நிறுவனங்களின் பணியாளர்களை தொடர்பு கொண்டதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் மருந்துகள் மருத்துவ பொருட்களின் பற்றாக்குறை இலங்கை மக்களிற்கு பெரும் கரிசனைக்குரிய விடயமாக உள்ளது.
கடந்த சில மாதங்கள் இலங்கையின் சுகாதார துறைக்கு அதிர்ச்சியளிக்கும் சவால்களை கொண்டுவந்துள்ளது.
மருத்துவ தாதிமார்கள் கையுறைகள் இன்றி நோயாளிகளிடமிருந்து இரத்தத்தை சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என சுகாதார பணியாளர் ஒருவர் சர்வதேச மன்னிப்புச் சபைக்கு தெரிவித்தார்.
No comments:
Post a Comment