(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்,எம்.வசீம்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் பெரும்பாலான உறுப்பினர்கள் கோப் குழுவுக்கு நியமிக்கப்படவில்லை. மாறாக ஏழு அறிவுடையவரின் உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை வெட்கப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார்.
சபாநாயகர் தலைமையில் திங்கட்கிழமை (3) இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின்போது கோப் குழுவுக்கு சுயாதீன தரப்பினரின் உறுப்பினர்கள் நியமிக்கப்படாமை குறித்து விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தில் இருந்து விலகி பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் பெரும்பாலான உறுப்பினர்கள் பாராளுமன்ற தெரிவுக் குழுவுகளுக்கு நியமிக்கப்படவில்லை. கோப் குழுவின் உறுப்பினர் நியமனத்தில் சுயாதீனமாக செயற்படும் தரப்பினர்களுக்கு இடமளிக்கப்படவில்லை.
ஏழு அறிவுடையவரின் உதவியாளர்கள் கோப் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏழு அறிவுடையவர் அமெரிக்காவில் இருந்துகொண்டு கோப் குழுவையும் இனி வழி நடத்துவார். இது வெட்கப்பட வேண்டும். கோப் குழு உறுப்பினர் நியமனத்தில் இழைக்கப்பட்டுள்ள அநீதி திருத்திக் கொள்ளப்பட வேண்டும்.
கோப் குழுவின் தலைவர் பதவியை பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ரஞ்சித் பண்டாரவுக்கு வழங்க ஏழு அறிவுடையவர் ஆலோசனை வழங்கியுள்ளார். கோப் குழுவின் செயற்பாடு எவ்வாறு அமைய வேண்டும், அதன் கட்டமைப்பு எவ்வாறு காணப்பட வேண்டும் என்பதைம் ஏழு அறிவுடையவர் வகுத்துள்ளார்.
பாராளுமன்ற விவாதத்தில் சுயாதீன தரப்பினருக்கு எந்தளவுக்கு காலவகாசம் வழங்கப்படுகிறது என்பது கேள்விக்குரியது. தற்போது சுயாதீன தரப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள காலத்தில் 33 உறுப்பினர்களுக்கும் உரையாற்ற வாய்ப்பு கிடைக்கப் பெறாது.
எதிர்க்கட்சியில் இருந்து ஆளும் தரப்பு பக்கம் சென்ற ஹரீன் பெர்னான்டோ, மனுஸ நாணயக்கார ஆகியோருக்கு உரையாற்ற காலவகாசம் வழங்கப்படுமாயின் ஏன் ஆளும் தரப்பில் இருந்து எதிர்க்கட்சி பக்கம் வந்து சுயாதீனமாக செயற்படும் தரப்பினருக்கு வாய்ப்பளிக்கக் கூடாது. சுயாதீனமாக செயற்படும் தரப்பினருக்கு உரையாற்ற வாய்ப்பளிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment