(நா.தனுஜா)
கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாக மதிப்பிடப்படும் பண வீக்கம் கடந்த செப்டெம்பர் கணசமானளவினால் உயர்வடைந்து 69.8 சதவீதமாகப் பதிவாகியிருக்கின்றது. இப்பண வீக்கமானது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 64.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், அது செப்டெம்பரில் 5.5 சதவீத அதிகரிப்பைக் காண்பித்திருக்கின்றது.
கடந்த ஒரு மாத காலத்தில் பழங்கள், கோழி இறைச்சி, கோதுமை மா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மற்றும் வீடமைப்பு, நீர், மின்சாரம், எரிவாயு, உணவகம், சுகாதாரம், கல்வி, தொடர்பாடல் போன்ற உணவல்லாப் பொருட்கள், சேவைகளின் விலைகள், கட்டணங்களில் ஏற்பட்ட அதிகரிப்பே இப்பண வீக்க உயர்விற்குப் பிரதான காரணமாக அமைந்திருப்பதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
குறிப்பாக உணவு மற்றும் உணவல்லாப் பொருட்களின் மாதாந்த விலையதிகரிப்பு பண வீக்கம் உயர்வடைவதற்கான முக்கிய காரணமாக அமைந்திருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ள மத்திய வங்கி கடந்த ஓகஸ்ட் மாதம் 93.7 சதவீதமாகப் பதிவாகியிருந்த உணவுப் பண வீக்கம் செப்டெம்பர் மாதத்தில் 94.9 சதவீதமாக அதிகரித்திருப்பதாகவும், ஓகஸ்டில் 50.2 சதவீதமாகக் காணப்பட்ட உணவல்லாப் பண வீக்கம் செப்டெம்பர் 57.6 சதவீதமாக உயர்வடைந்ததாகவும் தெரிவித்துள்ளது.
அதேவேளை உணவு மற்றும் உணவல்லாப் பொருட்களின் விலைகளைப் பொறுத்தமட்டில், அவற்றில் முறையே 0.35 சதவீதம் மற்றும் 3.42 சதவீதம் என்ற அடிப்படையில் ஏற்பட்ட அதிகரிப்பின் காரணமாக கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணின் மாதாந்த மாற்றம் கடந்த செப்டெம்பரில் 3.77 சதவீதமாகப் பதிவாகியது.
இக்கணிப்பீட்டின்படி பொருளாதாரத்தின் அடிப்படைப் பண வீக்கத்தைப் பிரதிபலிக்கின்ற மையப் பண வீக்கமானது கடந்த ஓகஸ்ட் மாதம் 46.6 சதவீதமாகப் பதிவாகியிருந்த போதிலும், அது செப்டெம்பர் மாதம் 50.2 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
அதேவேளை ஓகஸ்ட் மாதம் 20.3 சதவீதமாகப் பதிவான ஆண்டுக்கான சராசரி மையப் பண வீக்கம், செப்டெம்பரில் 24.1 சதவீதமாக உயர்வடைந்துள்ளது.
இவ்வாறானதொரு பின்னணியில் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, ஜுன், ஜுலை, ஓகஸ்ட் ஆகிய கடந்த 8 மாதகாலப்பகுதியில் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெணுக்கு அமைவாகக் கணிப்பிடப்பட்ட பண வீக்கமானது முறையே 14.2, 15.1, 18.7, 29.8, 39.1, 54.6, 60.8, 64.3 சதவீதமாகப் பதிவாகியிருந்த நிலையில், இது செப்டெம்பர் மாதத்தில் 69.8 சதவீதமாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment