(எம்.வை.எம்.சியாம்)
தனி நபர் ஒருவருக்கு சொந்தமான பேருவளை மற்றும் தர்கா நகர் பகுதிகளில் உள்ள களஞ்சிசாலைகளில் இருந்து நுகர்வுக்கு பொருத்தமில்லாத 16,000 கிலோ அரிசி நேற்று செவ்வாய்க்கிழமை (04) பேருவளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
பேருவளை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக பேருவளை பொலிஸார், பேருவளை பொது சுகாதார பரிசோதகர் சங்கம், பேருவளை தேசிய சுகாதார நிறுவனம், பேருவளை வைத்திய அதிகாரிகள் காரியாலயம் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இவ்வாறு நுகர்வுக்கு பொருத்தமில்லாத களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 16,000 கிலோ அரிசி மீட்கப்பட்டுள்ளது.
குறித்த அரிசியினை கொழும்பு - வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள களஞ்சியசாலைக்கு கொண்டு சென்று அங்கு மீண்டும் களஞ்சியப்படுத்தப்பட்டு நுகர்வுக்கு பொருத்தமான அரிசியாக மாற்றி மீளவும் அதனை விற்பனை செய்யப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் குறித்த அரிசி வகைகளை அளுத்கம, பேருவளை, தர்கா நகர், மக்கொன மற்றும் பயாலகல போன்ற பிரதேசங்களில் காணப்படும் இரவு நேர உணவகங்கள் மற்றும் சந்தைகளுக்கு குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
இந்நிலையில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக இரசாயன பரிசோதனைகளுக்காக குறித்த அரிசி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த களஞ்சியசாலை பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பேருவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.
No comments:
Post a Comment