ரணில், ராஜபக்ஷ உடலில் ஒரே வகையான இரத்தம் : மொட்டுக் கட்சி வங்குரோத்தடைந்து பாதாளத்திற்குள் தள்ளப்படும் - ஹிருணிக்கா பிரேமசந்திர - News View

About Us

About Us

Breaking

Friday, September 30, 2022

ரணில், ராஜபக்ஷ உடலில் ஒரே வகையான இரத்தம் : மொட்டுக் கட்சி வங்குரோத்தடைந்து பாதாளத்திற்குள் தள்ளப்படும் - ஹிருணிக்கா பிரேமசந்திர

(எம்.வை.எம்.சியாம்)

அரசாங்கத்தின் பதவிக் காலம் எதிர்வரும் மார்ச் மாதமளவில் மற்றொரு மக்கள் எழுச்சி போராட்டத்தின் மூலம் நிறைவுக்கு கொண்டு வரப்படும். மேலும் ரணில் - ராஜபக்ஷ இருவரின் உடலிலும் ஒரே வகையான இரத்தமே காணப்படுகிறது என்றும் பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கே பொருத்தமானது என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.

பிரதான எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நாட்டில் இதற்கு முன்னர் பணம் கொள்ளையிடும் சம்பவங்கள் பதிவாகின. இருப்பினும் இன்று உணவுப் பொருட்களை திருடும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள மக்களை திருடுவதற்கு தூண்டிவிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்பதை விடுத்து காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களை போதைப் பொருள் பாவனையாளர்கள், தீவிரவாதிகள் என்று அடையாளப்படுத்த முயற்சி செய்து மேலும் அவர்களுக்கு புனர்வாழ்வு மையங்கள் அமைத்து அவர்களை அங்கு கொண்டு செல்வதற்கு முயற்சிக்கிறார்கள்.

ஜனாதிபதி ரணிலின் வில்லத்தனம் மற்றும் சர்வாதிகார போக்கினை இன்று முழு நாடும் புரிந்துள்ளது. கடந்த காலங்களில் ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு வெளியில் நடமாட முடியாத நிலை இருந்தது அதனை இன்று ரணில் முற்றாக மாற்றியிருக்கிறார்.

மொட்டு கட்சியில் இருந்த பிரதான செயற்பாட்டாளர்களுக்கு தலை காட்ட முடியாமல் இருந்தது. அவர்கள் தொடர்பில் மக்களுக்கு சிறிதளவு கூட நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் அவர்கள் பயணிப்பதற்கு பாதை அமைத்து கொடுக்கப்பட்டு இருக்கிறது.

ஜனாதிபதி இன்று மொட்டு கட்சியினருடன் அரசியல் நாடகம் ஒன்றினை அரங்கேற்றுகிறார். ஆனால் தற்போது அரசியலில் பொருத்தமான இடத்திற்கே அவர் வருகை தந்து இருக்கிறார் இதற்கு முன்னர் தவறான கட்சி ஒன்றில் தலைவராக செயல்பட்டு கொண்டு இருந்தார். இருப்பினும் இன்று இந்த மொட்டுக் கட்சியின் தலைமைத்துவம் ரணிலுக்கே பொருத்தமானதாக காணப்படுகிறது.

இனிவரும் காலங்களில் மொட்டு கட்சியின் பிரதான அரசியல்வாதிகள் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுவார்கள். அவர்களுக்கு ராஜபக்ச மற்றும் ரணில் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது என்பது ஒன்றுதான். மேலும் அவர்கள் இருவருக்கும் ஒரே வகையான இரத்தமே உடலில் காணப்படுகிறது.

இந்நிலையில் ஜனாதிபதி தனது இறுதி அரசியல் வாழ்க்கையில் பயணித்து கொண்டிருக்கிறார் எதிர்வரும் மார்ச் மாதமளவில் ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்தின் ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்படும் என்பது உறுதி.

நாட்டில் நிச்சயம் அரசியல் மாற்றம் நிகழும். அப்போது மொட்டுக் கட்சி வங்குரோத்து நிலையை அடைந்து பாதாளத்திற்குள் தள்ளப்படும். எதிர்வரும் நாட்களில் சுனாமி போன்ற மக்கள் எழுச்சி போராட்டம் உருவாகும். அதில் அரசாங்கத்தினர் அள்ளுண்டு செல்வார்கள் என்பது உறுதி என்றார்.

No comments:

Post a Comment