நாட்டை மீட்டெடுக்க முறையான எந்தவொரு வேலைத்திட்டமின்மையே சர்வதேச நாணய நிதியத்தின் உதவி காலதாமதமாக காரணம் - காவிந்த ஜயவர்தன - News View

About Us

About Us

Breaking

Friday, September 30, 2022

நாட்டை மீட்டெடுக்க முறையான எந்தவொரு வேலைத்திட்டமின்மையே சர்வதேச நாணய நிதியத்தின் உதவி காலதாமதமாக காரணம் - காவிந்த ஜயவர்தன

(எம்.வை.எம்.சியாம்)

ஆட்சியாளர்களின் ஊழல் மோசடி செயற்பாடுகளே தற்போது நாடு முழுமையாக வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதற்கான பிரதான காரணமாகும். இந்நிலையில் நாட்டை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீட்டெடுப்பதற்கு முறையான எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் அதன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்தின் உதவி காலதாமதமாகிறது என்றும் பிரதான எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரித்த அவர் மேலும் கூறுகையில், அரசாங்கத்திற்கு நாடு வங்குரோத்து நிலை அடைந்து விட்டது என்பது இன்னமும் அறிந்து கொள்ளவில்லை. நாடு வங்குரோத்து அடைந்து விட்டால் நாட்டு மக்கள் வறுமையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

இன்று நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள மக்கள் அதனை தாங்கிக் கொள்ள முடியாது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரி வீதிகளில் இறங்கி போராடுகிறார்கள்.

பாடசாலை மாணவர்கள் உணவின்றி மயங்கி விழுகிறார்கள், பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியாக அவர்களின் கல்வியை தொடர முடியாமல் வீதிகளில் இறங்குகிறார்கள், மீனவர்கள், வைத்தியர்கள், வர்த்தகர்கள், மற்றும் பெருந்தோட்ட தொழிலாளர்கள் என்று அனைவரும் இவ்வாறு பொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கிறார்கள்.

இருப்பினும் நாட்டை பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீண்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு முறையான எந்தவொரு வேலைத்திட்டமும் அரசாங்கத்திடமும் கிடையாது.

மேலும் அரசாங்கத்திற்கு நாட்டில் அடிப்படை மனித உரிமைகளை எவ்வாறு பாதுகாப்பது, நீதியை எவ்வாறு நிலை நாட்டுவது, நிம்மதியாக வாழக்கூடிய ஒரு நாட்டை மக்களுக்கு எவ்வாறு பெற்றுக் கொடுப்பது என்பது தொடர்பில் அரசாங்கத்திற்கு எதுவித கரிசனையும் கொள்கைகளும் கிடையாது.

இதன் காரணமாகவே சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவி பிற்போடப்படுகிறது. இலங்கைகு வழங்க உள்ள நிதி உதவி தொடர்பில் உறுதியான கால எல்லையை அறிவிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது.

இருப்பினும் அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறை செயற்பாடுகள, அரச சொத்துக்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதன் காரணமாக சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.

நாட்டு மக்களை வறுமைக்கு தள்ளி அதன் மூலம் மேலும் கோடிக்கணக்கில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு கொண்டு இருக்கிறது. இந்த அரசாங்கம். எரிபொருள், நிலக்கரி மற்றும் வெடிபொருட்கள் இறக்குமதியில் மோசடிகளில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச தரப்பினர்களுக்கு அரச வரப்பிரசாதங்களை அள்ளி வழங்குவதோடு சில உரிமங்களை தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் முனைப்பு காட்டுகிறது.

மேலும் இன்று நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்களுக்கு தண்டனை வழங்குமாறு ஐ.நா மனித உரிமை பேரவையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அவர்களுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டும். எனவே உடனே பாராளுமன்ற தெரிவு குழுவை அமைத்து குறித்த தரப்பினருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment