எதனோல் தொகை உள்ளடங்கிய அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கவும் : வாகனங்கள், உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யவதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பிலும் COPA குழு கேள்வி - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 15, 2022

எதனோல் தொகை உள்ளடங்கிய அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்கவும் : வாகனங்கள், உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யவதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பிலும் COPA குழு கேள்வி

நாட்டில் பயன்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்படும் எதனோலின் அளவு மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களுக்கு முறையான கட்டுப்பாடுகள் இல்லாமை குறித்து அண்மையில் (08) நடைபெற்ற அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

பல்வேறு நிறுவனங்களால் நாட்டிற்குள் எதனோல் இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் நடைமுறைகள், ஒவ்வொரு நிறுவனங்கள் பற்றிய தகவல்கள், நிறுவனங்களாலும் இறக்குமதி செய்யப்பட்ட எதனோல் தொகை உள்ளடங்கிய அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் தம்மிடம் சமர்ப்பிக்குமாறு இறக்குமதி, ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு பணிப்புரை விடுத்தது. 

அத்துடன், மதுபான உற்பத்தி தவிர ஔடதங்கள் உள்ளடங்களாக ஏனைய உற்பத்திகளை மேற்கொள்ள இறக்குமதி செய்யப்படும் எதனோலின் அளவு, அவற்றுக்கு எதனோல் உரிய முறையில் பயன்படுத்தப்படுகின்றதா என்பது குறித்தும் கவனத்தில் எடுக்க வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், இலங்கைக்கு வாகனங்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்யவதற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பிலும் குழு கேள்வியெழுப்பியதுடன், அதற்கான நடைமுறைகளை தயாரிப்பதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் இணைந்து பொறிமுறையொன்றைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடந்த காலங்களில் வலியுறுத்தப்பட்டிருந்தபோதும், சரியான நடவடிக்கைகள் எடுக்காமை தொடர்பில் குழு அதிருப்தியை வெளியிட்டது. 

உரிய செயற்பாடுகளை மிகவும் வினைத்திறனுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் பேணுவதற்கு பொருத்தமான பொறிமுறையொன்றைத் தயாரித்து நான்கு மாதங்களுக்குள் குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் மேலும் அறிவிக்கப்பட்டது.

இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின் செயற்பாடுகளை உரிய தரத்தில் முன்னெடுத்துச் செல்ல சரியான கணினிக் கட்டமைப்பொன்று இல்லாமை தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 

திணைக்களத்தின் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும்போது களால் திணைக்களம், மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம், இலங்கை சுங்கம் போன்று நேரடியாகத் தொடர்புபட்ட நிறுவனங்களுடன் இணைந்து செயற்படாமை சிக்கலுக்குரியது என அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு சுட்டிக்காட்டியதுடன், கணினி வலையமைப்பை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு உரிய செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் வலியுறுத்தியது.

இதற்காக, இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA), பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு போன்ற நிறுவனங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. 

இவ்விடயம் தொடர்பில் 2016ஆம் ஆண்டு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும் இதுவரையில் இப்பணிகள் மேற்கொள்ளப்படாமை குறித்து அதிருப்தி வெளியிட்ட குழு, இதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்கு குழுவின் தலைவர் உப குழுவொன்றையும் நியமித்தார்.

அத்துடன், வரிச் சலுகை அடிப்படையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை 05 வருடங்கள் முடியும் வரை வேறு தரப்பினருக்கு மாற்ற முடியாது என அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர். 

அவ்வாறு மாற்றம் செய்யப்பட்டு 5 வருடங்கள் கடந்த பின்னரும், உரிய வாகனங்களின் சாதாரண வரிப் பெறுமதியை மீளப் பெறுவதற்குத் தேவையான நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 

சலுகை அடிப்படையின் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கான உரிமங்களை முறையாகப் பின்தொடர்தல் மற்றும் ஒழுங்குபடுத்தலின் முக்கியத்துவத்தையும் குழு வலியுறுத்தியது.

2015 செப்டெம்பர் 21ஆம் திகதிய 1933/13ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய உரிமைப்பத்திர கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வாகனங்களுக்கான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் அபிவிருத்தி உத்திகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சரினால் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டாளருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய 2017ஆம் ஆண்டு 33 பயன்படுத்தப்பட்ட மோட்டார் வாகனங்களுக்குப் பிழையான சுங்க இணைப்பு இலக்கங்கள் வழங்கப்பட்டமையால் 114.6 மில்லியன் ரூபா சுங்க வரி இழப்பு ஏற்பட்டமை குறித்தும் குழு விசாரணை நடத்தியது. 

அதன்படி முழுமையான விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டதுடன், இவ்விடயத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தொடர்பில் 02 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குழுவின் தலைவர் பணித்தார்.

அத்துடன், சீனி கிலோவொன்றுக்கு அறவிடப்படும் விசேட வரியை 50 ரூபாவிலிருந்து 25 சதமாகக் குறைத்ததன் ஊடாக எதிர்பார்த்த நன்மை நுகர்வோரைச் சென்றடையாமை குறித்து ஆராய்வதற்கான விசேட கணக்காய்வு அறிக்கை தொடர்பிலும் குழுவின் கடந்த அமர்வில் கலந்துரையாடப்பட்டிருந்தது. 

சீனி இறக்குமதிக்காக அனுமதிப்பத்திரம் வழங்கும் முறைமையொன்றை அறிமுகப்படுத்தல் மற்றம் சீனி இறக்குமதியைக் கட்டுப்படுத்த அவசியமான அளவுகோல்களை அறிமுகப்படுத்தாமை குறித்து இம்மாதம் 21ஆம் திகதி குழு கலந்துரையாடவுள்ளது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான லசந்த அழகியவண்ண, திஸ்ஸ அத்தநாயக, துமிந்த திஸாநாயக, உதய கம்மன்பில, (வைத்தியகலாநிதி) சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே, மொஹமட் முஸம்மில், நிரோஷன் பெரேரா, அசோக் அபேசிங்க, வீரசுமண வீரசிங்க, ரஞ்சித் பண்டார, பி.வை.ஜீ. ரத்னசேகர, (வைத்தியகலாநிதி) உபுல் கலப்பத்தி ஆகியோருடன், அரசாங்க அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment