விலங்குகள் நலன் பேணல் சட்டமூலம் தொடர்பில் கமத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் விசேட கவனம் : பயிர்ச் செய்கையை வெற்றிகரமாக்கிக் கொள்ள இராணுவம், சிவில் பாதுகாப்பு பிரிவு, 3000 சிறைக் கைதிகளை பயன்படுத்த திட்டம் - News View

About Us

Add+Banner

Wednesday, June 15, 2022

demo-image

விலங்குகள் நலன் பேணல் சட்டமூலம் தொடர்பில் கமத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் விசேட கவனம் : பயிர்ச் செய்கையை வெற்றிகரமாக்கிக் கொள்ள இராணுவம், சிவில் பாதுகாப்பு பிரிவு, 3000 சிறைக் கைதிகளை பயன்படுத்த திட்டம்

Ministerial-Consultative-Committee-on-Agriculture-Special-Attention-Animal-Welfare-Bill
நீண்ட ஆலோசனை செயல்முறையின் கீழ் அரசு, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நலக் குழுக்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட உத்தேச விலங்கின நலம்பேணல் சட்டமூலம் தொடர்பில் கமத்தொழில், வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் அண்மையில் (10) கூடிய கமத்தொழில் அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

விலங்குகள் மீது அன்பு, கருணை மற்றும் உரிய கரிசனை காட்டுதல் மற்றும் விலங்குகளின் பாதுகாப்பு, நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்துதல் மற்றும் விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளிலிருந்து அவற்றைப் பாதுகாத்தல் என்பன இந்த சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும் எனவும் இந்த சட்டமூலத்தின் ஊடாக முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் மேலும் கவனம் செலுத்தி அது தொடர்பான திருத்தங்கள் காணப்படின் அவற்றையும் முன்வைக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர குழுவில் கோரிக்கை விடுத்தார்.

மேலும், தற்போதைய உணவு நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் வகையில் மக்கள் வீட்டுத் தோட்டம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுவதால், மக்களை வீட்டுத் தோட்டம் செய்வதற்கு ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் மற்றும் அனைத்து அரசாங்க அலுவலகங்களிலும் நிலத்தை பயிர்ச் செய்கைக்கு பயன்படுத்துதல் என்பன தொடர்பிலும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. 

இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக்கிக் கொள்ள இராணுவம், சிவில் பாதுகாப்பு பிரிவு மற்றும் சுமார் 3000 சிறைக் கைதிகளை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பில் மேலதிக கலந்துரையாடல் மேற்கொள்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொழும்பு மாவட்டம் உட்பட சகல பிரதேசங்களிலும் உள்ள பயன்படுத்தப்படாத வயல் காணிகள், வயல் காணிகளை நிரப்பி கட்டடங்களை நிர்மாணித்தல் மற்றும் நீர்ப்பாசனப் பிரச்சினைகள் தொடர்பிலும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. 

அதற்கமைவாக மாவட்ட மட்டத்தில் குழுவொன்றை அமைத்து பயிரிடக்கூடிய வயல் காணிகள் மற்றும் பயிரிட முடியாத நிலங்கள் தொடர்பில் உரிய ஆவணமொன்றை தயாரிப்பது முக்கியமானது எனவும் அது தொடர்பில் கவனம் செலுத்துமாறும் அமைச்சர் அதிகாரிகளுக்கு தெரிவித்தார்.

தரிசு நிலங்களில் விவசாயம் செய்வதற்கு கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களை ஊக்குவிப்பதன் முக்கியத்துவம் குறித்தும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்கான முறையான திட்டத்தை தயாரித்து செயல்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு அறிவிருறுத்தியதுடன், தற்பொழுது பயிரிடப்படாத நிலங்களில் பயிற்செய்கையை மேற்கொள்ள விவசாய ஆராய்ச்சி அதிகாரிகளின் உதவியை தொடர்ந்தும் வழங்குமாறும் அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தினார்.

எதிர்காலத்தில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உரத்தை, நெல் மற்றும் சோளம் உற்பத்திக்கு ஜூலை மாதத்தில் வழங்குவது தொடர்பில் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், அந்த உரத்தை விநியோகிக்கும் போது திட்டமிட்ட அடிப்படையிலும் முக்கியத்துவ அடிப்படையிலும் விநியோக நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அமைச்சர் குழுவில் தெரிவித்தார்.

அறுவடை சேதம் தொடர்பில் குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன் இது தொடர்பில் சாதகமான அறிக்கையொன்று தயாரிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. 

விசேடமாக வீட்டுத் தோட்ட பயிற் செய்கையின் போது பொதுமக்களுக்கு பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதால் நாடு தழுவிய ரீதியில் அவர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்குவதன் முக்கியத்துவம் மற்றும் அதற்காக அதிகாரிகளை வினைத்திறனான முறையில் ஈடுபடுத்துவது தொடர்பிலும் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.

தற்பொழுது பயிரிடப்படாத நிலங்களில் பயிற் செய்கையை ஊக்குவிப்பதற்கு 'சேர்ந்து பயிரிடுவோம் - நாட்டை வெல்வோம்' எனும் வேலைத்திட்டம் தொடர்பில் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கவனத்துக்கு கொண்டுவருவதாகவும், இது தொடர்பில் யோசனைகளை முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் குழுவில் தெளிவுபடுத்தினார்.

கமத்தொழில், வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கே. காதர் மஸ்தான், தாரக பாலசூரிய, சிவஞானம் சிறிதரன், மொஹமட் முஸம்மில், வீரசுமன வீரசிங்க, மதுர விதானகே, உபுல் மகேந்திர ராஜபக்ஷ மற்றும் அரச அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *