களனி கங்கை பெறுக்கடுத்ததில் மல்வானை உட்பட பியகம பிரதேசத்தில் தாழ்நில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின : போக்குவரத்தும் ஸ்தம்பிதம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 1, 2022

களனி கங்கை பெறுக்கடுத்ததில் மல்வானை உட்பட பியகம பிரதேசத்தில் தாழ்நில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கின : போக்குவரத்தும் ஸ்தம்பிதம்

(எம்.ஆர்.எம்.வசீம்)

கடும் மழை காரணமாக களனி கங்கை பெறுக்கடுத்ததில் மல்வானை உட்பட பியகம பிரதேசத்தில் தாழ்நில பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. அதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதால் போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்தது.

நாட்டில் கடந்த சில தினங்களாக ஏற்பட்டிருக்கும் சீரற்ற காலநிலையால் கம்பஹா மாவட்டத்தில் பல தாழ் நில பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக களனி கங்கை பெருக்கடுத்ததால், தாழ் நில பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

குறிப்பாக பியகமே பிரதேச சபைக்கு உட்பட்ட மல்வானை, ரக்ஷபான, காந்திவல, மாபிட்டிகம போன்ற கிராமங்களுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

வீடுகள், வியாபார நிலையங்களுக்குள்ளும் நீர் சென்றுள்ளது. அதனால் வியாபார நிலையங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் சிறு வியாபார நிலையங்களை வைத்திருப்பவர்கள் பொருட்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்வதை காணக்கூடியதாக இருந்தது.

போக்குவரத்து பாதிப்பு
அத்துடன் களனி கங்கை பெறுக்கெடுத்ததில் கொழும்பு, மல்வானை பிரதான வீதியில் பல இடங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அதனால் இன்று (01) காலை நேரத்தில் பயணிகள் போக்குவரத்து, சிறிது நேரம் தடைப்பட்டிருந்தபோதும், மாற்று வீதிகள் ஊடாக போக்குவரத்து இடம்பெற்றது.

குறிப்பாக கொழும்பு, பியகம பிரதான வீதியில் மோட்டார் சைக்கிள், முச்சக்கர வண்டிகள் பயணிக்க முடியாத நிலை இருந்தது. அதனால் அந்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் இடம்பெற்றிருந்தது.

அத்துடன் களனி கங்கை பெருக்கெடுத்தால் ஆரம்பாக பாதிக்கப்படுவது பியகம பிரதேசமாகும். இன்று புதன்கிழமை காலை பியகம கொகாகோலா கம்பனி மற்றும் பியர் கம்பனி அமைந்துள்ள இடங்களின் பிரதான வீதி வெள்ள நீரில் மூழ்கியிருந்தது. அதனால் அந்த வீதியின் ஒரு பகுதி போக்குவரத்து செய்ய முடியாமல் வீதித்தடைகள் போடப்பட்டிருந்தன.

அதேபோன்று அந்த பிரதேசத்தில் அதிகாமான வீடுகளுக்குள்ளும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது. இதனால் அதிகாமான மக்கள் அச்சத்தில் பிரதான வீதிக்கு வந்து நிலைமையை அவதானித்துக் கொண்டிருந்தனர்.

நிவாரண நடவடிக்கைக்கு இராணுவத்தினர் தயார் நிலையில்
மேலும் மல்வானை ரக்ஷ்பான பிரதான வீதியை அண்மித்தே களனி கங்கை செல்கின்றது. இன்று காலை நேரத்தில் களனி கங்கை பெருக்கெடுத்து நீர் உட்புக ஆரம்பித்திருந்தது. அதனால் அந்த பிரதேசத்தில் அனர்த்த நிலைமைகள் ஏற்படும்போது நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட இராணுவத்தினரும் அங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

அத்துடன் இன்று கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இறுதி நாளாகும். பரீட்சை எழுதச் செல்லும் மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகளிலும் இராணுவத்தினர் ஈடுபட்டு வந்தனர்.

என்றாலும் இன்று பிற்பகல் வேளையில் காலநிலை ஓரளவு சீரான நிலைமையில் இருந்தது. அத்துடன் வெள்ள நீரும் வடிந்தோடுவதை காணக்கூடியதாக இருந்து.

என்றாலும் இரவு வேளைகளில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தால், அல்லது மலைப்பிரதேசங்களில் வான் கதவுகள் திறக்கப்பட்டால் நிலைமை மோசமாகும் அபாயம் இருக்கின்றது.

No comments:

Post a Comment