(எம்.ஆர்.எம்.வசீம்)
நாடு எதிர்கொண்டுள்ள பொருளதாார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு கடன் இல்லாத வெளிநாட்டு செலாவணியை முடியுமானளவு நாட்டுக்கு கொண்டுவர வேண்டி இருக்கின்றது. அதற்காக வெளிநாடுகளில் தொழில் செய்பவர்கள் தங்கள் பணத்தை சட்ட ரீதியாக, வங்கி ஊடாக அனுப்புமாறு கேட்டுக் கொள்கின்றேன். டொலர் பிரச்சினை காரணமாக மருந்து பொருட்களை கொண்டுவருவதற்கு முடியாமல் நோயாளர்கள் ஆபத்தான நிலைக்கு ஆளாகி உள்ளனர் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் ஜப்பான் நாடுகளில் தொழில் வாய்ப்பு கிடைத்த குழுவொன்றுக்கு விமான பற்றுச்சீட்டு கையளிக்கும் நிகழ்வு புதன்கிழமை (1) தொழில் அமைச்சில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பட்டார்.
இது தொடர்பாக அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு இன்று இக்கட்டானதொரு நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றது. இந்த நிலைக்கு நாட்டை தள்ளியவர்களை கண்டு பிடித்து அவர்களுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டும். என்றாலும் அதற்கு முன்னர் நாடு வீழ்த்தப்பட்டிருக்கும் நிலையில் இருந்து கட்டியெழுப்ப வேண்டி இருக்கின்றது.
நாட்டு மக்கள் உணவில்லாமல் இருக்கின்றனர். மருந்து இல்லாமல் வைத்தியசாலைகளில் தங்கி சிகிச்சை பெற்றுவரும் சிறுவர்கள் இறக்கின்றனர். 800 வகையான மருந்து பொருட்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.
அதேபோன்று காஸ் இல்லாமையால் நகர மக்கள் அவர்களது ஒருவேளை உணவை சமைத்துக் கொள்ள முடியாமல் இருக்கின்றனர்.
எரிபொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் அனைத்து பொருட்களதும் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. மருந்து இல்லாமல் தங்களின் பிள்ளை இறப்பதை தாய், தந்தைமாறுக்கு தாங்கிக் கொள்ள முடியாத வேதனையாகும்.
அதனால்தான் நாங்கள் தற்போது ஏற்பட்டிருக்கும் பிரச்சினைக்கு தீர்வு காண அரசியல் தீர்மானம் ஒன்றை எடுத்தோம். அத்துடன் நானும் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோவும் நாட்டுக்குள் டொலரை எடுத்துவரும் பிரதான பொறுப்பை எடுத்திருக்கின்றோம்.
சரியான வழியில் டொலர்களை நாட்டுக்கு அனுப்பினால் காஸ் மற்றும் எரிபொருள் விரிசையை நிறுத்த முடியும். பிள்ளைகளுக்கு பால்மா, மருந்து வகைகளை பெற்றுக் கொடுக்க முடியுமாகின்றது.
வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து மாதாந்தம் கிடைக்கும் வருமான அளவு தற்போது 230 மில்லியன் டொலர் வரை குறைந்திருக்கின்றது. வெளிநாட்டு தொழிலாளர்களிடமிருந்து 7, 8 பில்லியன் வரை இந்த நாட்டுக்கு அனுப்பிய வருடங்களும் இருக்கின்றன.
எனவே தொடர்ந்தும் நாடு கடன் இல்லாமல் இன்று வீழ்த்தப்பட்டிருக்கும் நிலையில் இருந்து மீட்பதற்கு வெளிநாட்டுகளில் தொழில் புரிபவர்களுக்கு முடியுமாக இருக்கி்ன்றது.
அதனால் நாட்டை கடனாளியாக்குவதா, இல்லாவிட்டால் நாட்டுக்கு சக்தியாக இருந்து நாட்டை கட்டியெழுப்புவதா என்ற பொறுப்பு வெளிநாட்டுகளில் தொழில் செய்துவரும் இலங்கையர்களிடமே இருக்கின்றது என்றார்.
No comments:
Post a Comment