(இராஜதுரை ஹஷான்)
ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் பிற நாடுகளுடன் செய்துகொள்ளும் இரு தரப்பு மற்றும் பல் தரப்பு ஒப்பந்தங்கள் பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும். பாராளுமன்றத்தின் கண்காணிப்பின் முழு அரச நிர்வாகமும் முன்னெடுக்கப்படல், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை தவிர்த்து ஏனைய எந்த அமைச்சுக்களையும் வகிக்கக் கூடாது என பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் 10 அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச் சட்ட மூல வரைபு தொடர்பில் தமது யோசனைகளை நீதி, சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஷ ராஜபக்ஷவிடம் முன்வைத்துள்ளனர்.
அந்த யோசனைகள் வருமாறு, குறித்த சட்ட மூலத்திற்கு பாராளுமன்ற தெரிவுக் குழுவின்போது சில திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அதற்கு சபாநாயகர் கைச்சாத்திட்டதை தொடர்ந்து அச்சட்டத்தை உயர் நீதிமன்றில் சவாலுக்குட்படுத்த நாட்டு பிரஜைகளுக்கு ஒரு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும்.
ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் பிற நாடுகளுடன் செய்துகொள்ளும் இரு தரப்பு மற்றும் பல் தரப்பு ஒப்பந்தங்கள் பாராளுமன்ற அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
அரச நிறுவனத்தின் கட்டமைப்பை மாற்றம் செய்யும் போது அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெறப்பட வேண்டும்.
துறைமுகம், விமான நிலையம் ஆகிய தேசிய வளங்களின் முதலீடுகள் மற்றும் ஒப்பந்தங்கள் தேசிய பெறுகை ஆணைக்குழுவின் கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டு அதற்கு பாராளுமன்றத்தின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
தேசிய பாதுகாப்பு சபையின் உறுப்பினராக பிரதமர் பதவி வகிக்க வேண்டும், ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சினை மாத்திரம் வகிக்க வேண்டும்.
பிரதமர் உட்பட எதிர்க்கட்சித் தலைவர் அரசியலமைப்பு சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர்களை தவிர்த்து ஏனையோரை தெரிவு செய்யும் போது இலங்கை வர்த்தக சபையினால் பெயர் குறிப்பிடப்படும் வர்த்தகர் அல்லது நிறுவன பணிப்பாளர், தொழிற்சங்கத்தினால் பெயர் குறிப்பிடப்படும் நிபுணர், பல்கலைக்கழக வேந்தர்கள் ஒன்றியத்தின் பரிந்துரைக்கமைய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பெயர் குறிப்பிடப்படும் ஒருவர் என்ற அடிப்படையில் அந்த மூன்று பேர் தெரிவு செய்யப்பட வேண்டும்.
ஒரு நபரை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிப்பதற்கு அரசியலமைப்பு சபை ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்யும் போது அந்த பரிந்துரை எத்தன்மையில் அமைய வேண்டும் என்பது தொடர்பில் குறிப்பிடப்படவில்லை. ஆணைக்குழுவின் உறுப்பினர் நியமனத்திற்கு பெயர் குறிப்பிடும் வாய்ப்பு சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
அரசியலமைப்பு சபையினால் ஒரு பதவிக்கு பரிந்துரை செய்யப்படும் நபர் தகைமை பெற்றவராக காணப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அதற்கான முறையான கட்டமைப்பு குறிப்பிடப்படவில்லை.
மேல்; நீதிமன்றத்திற்கு நீதிபதிகளுக்கான பரிந்துரைகளின் போது சிறந்த தரப்பினரது பெயர் உள்ளடங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு சமூகத்தில் மத்தியில் காணப்படுகிறது. இவ்வாரான விடயம் குறித்து அவதானம் செலுத்தப்பட வேண்டும்.
அத்துடன் 44(1), 44(2), 45(1),45(2), மற்றும் 46(1) , 50(1) ஆகிய திருத்த யோசனைகளில் பிரதமரின் ஆலோசனைக்கமைய என்பதற்கு பதிலாக பிரதமரின் எழுத்து மூலமாக இணக்கப்பாடு என திருத்தம் செய்யப்பட வேண்டும்.
பொலிஸாரினால் பொதுமக்களுக்கு இழைக்கப்படும் அநீதி மற்றும் நெருக்கடி தொடர்பில் உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடளிக்கப்பட்டாலும் அது குறித்து அவர்கள் விசாரணைகளை முன்னெடுக்க முயற்சிப்பதில்லை. ஆகவே பொதுமக்களின் முறைப்பாடு மற்றும் உயர் அதிகாரிகளின் அலட்சியப்போக்கு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் அதிகாரம் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு வழங்க வேண்டும்.
பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதியின் பதவிக் காலத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திருத்தங்களை மேற்கொள்ளக் கூடாது. அது தொடர்பில் இடைக்கால விடயதானங்களை உள்ளடக்க வேண்டும்.
No comments:
Post a Comment