முக்கிய அரச நிறுவனங்களை மாகாணங்களுக்கு பரவலாக்கத் திட்டம் : அரச ஊழியர்களின் ஒழுக்காற்று விசாரணைகளை துரிதப்படுத்த ஆலோசனை : விவசாயத்தில் இளைஞர்களுக்கு முன்னுரிமை - News View

About Us

About Us

Breaking

Sunday, June 12, 2022

முக்கிய அரச நிறுவனங்களை மாகாணங்களுக்கு பரவலாக்கத் திட்டம் : அரச ஊழியர்களின் ஒழுக்காற்று விசாரணைகளை துரிதப்படுத்த ஆலோசனை : விவசாயத்தில் இளைஞர்களுக்கு முன்னுரிமை

குறுகிய காலத்தில் தரமான அரச சேவையை வழங்குதல் மற்றும் ஊழியர்களின் திருப்தியை அதிகரிக்கும் நோக்கில் அரச சேவை தொடர்பில் முறையான ஆய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் வகிபாகம் மற்றும் துரிதப்படுத்தப்பட்ட வீட்டுத்தோட்டம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (10) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

ஒரே சேவையை வழங்குகின்ற அரச நிறுவனங்களை ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். தலைநகரில் உள்ள முக்கிய அரச நிறுவனங்களை மாகாணங்களுக்கு பரவலாக்குவதன் மூலம் கொழும்புக்கு வருகை தரும் அரச ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என ஜனாதிபதி தெரிவித்தார்.

அரச உத்தியோகத்தர்கள் தொடர்பில் நிலவுகின்ற ஒழுக்காற்று விசாரணைகளை துரிதப்படுத்தவும் அரச உத்தியோகத்தர்களிடமிருந்து உயர் சேவையைப் பெறுவதற்கான திட்டங்களை வகுப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.

பொது நிர்வாகம் மற்றும் விவசாய அமைச்சுக்கள் ஒற்றிணைந்து "இணைந்து பயிரிடுவோம் - நாட்டை வெற்றியடையச் செய்வோம்” தேசிய உணவுப் பாதுகாப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. 

ஒவ்வொரு பிரதேசங்களிலும் பயிரிடுவதற்குப் பொருத்தமானப் பயிர்களை மிகச் சரியாக கண்டறிய வேண்டியதன் அவசியத்தையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

விவசாயத்தில் இளைஞர்களுக்கு முன்னுரிமையளித்து அதிக உற்பத்தித்திறனைப் பெற்றுக்கொள்வதற்கும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிக விளைச்சளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் திட்டங்களை வகுக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

அமைச்சர் தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி அனுர திஸாநாயக்க, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்ன, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் பி.எல்.ஏ.ஜே. தர்மகீர்த்தி, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி. வனிகசிங்க மற்றும் ஏனைய துறைசார் நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment