பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருட்களை தேடி வேட்டையில் இறங்கியுள்ள இலங்கை ரஷ்யாவிடமிருந்து எண்ணெயை பெறுவதற்கு நிர்ப்பந்திக்கப்படலாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முதலில் வேறு தரப்புகளிடமிருந்து எரிபொருளை பெற முடியுமா என பார்ப்பேன். ஆனால் எண்ணெய்யை ரஷ்யாவிடமிருந்து பெறுவதற்கு தயாராகவுள்ளேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
உக்ரைன் யுத்தம் காரணமாக விதிக்கப்பட்ட தடைகளால் மேற்குலக நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எரிபொருட்களை பெறுவதை நிறுத்தியுள்ளன.
அசோசியேட்டட் பிரசிற்கு வழங்கிய பேட்டியில் பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் அதிகரிக்கின்ற போதிலும் சீனாவிடமிருந்து நிதி உதவியை பெற தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலைக்கு இலங்கையே காரணம் என்பதை ஏற்றுக் கொண்டுள்ள அவர், உக்ரைன் யுத்தம் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றது, 2024 வரை உணவுத் தட்டுப்பாடு நீடிக்கும் எனவும் ரஷ்யா இலங்கைக்கு கோதுமையை வழங்க முன்வந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் நிதியமைச்சராகவும் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்று ஒரு மாதம் கடந்துள்ள நிலையில் கொழும்பில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து அசோசியேட்டட் பிரஸ் உடன் உரையாடினார்.
இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு முற்றாக தீர்ந்துள்ள நிலையில் பொருளாதார நெருக்கடியை தீர்ப்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரை பிரதமராக நியமித்தார்.
இலங்கையின் கடன் 51 பில்லியன் டொலர்களாக தற்போது அதிகரித்துள்ளது. எனினும் இந்த வருடம் செலுத்த வேண்டிய ஏழு பில்லியன் டொலர் கடனை செலுத்துவதை இலங்கை இடை நிறுத்தியுள்ளது.
மிக மோசமான கடன் இலங்கை அத்தியாவசிய பொருட்களை இறக்குமதி செய்ய முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.
விக்கிரமசிங்க ரஷ்யாவிடமிருந்து மேலும் எண்ணெய்க்காக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து தெரியாது எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இலங்கைக்கு எரிபொருள் மிகவும் அவசியமாக உள்ளது. தற்போது மத்திய கிழக்கில் உள்ள அதன் பாரம்பரிய வழங்குநர்களிடமிருந்து நிலக்கரியை பெற முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
வேறு எந்த தரப்பிடமிருந்தாவது எண்ணெயை பெற முடியும் என்றால் அவர்களிடமிருந்து பெறுவோம் இல்லாவிட்டால் ரஷ்யாவிடமே செல்ல வேண்டும் என இலங்கையின் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரிகள் ஏனைய விநியோகஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளனர், உலகின் பல பகுதிகளில் எண்ணெய் கிடைக்கின்றது.
அது எங்கிருந்து வந்தது என ஆராய்ந்தால் ஈரான் அல்லது ரஷ்யாவிடமிருந்தே வந்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் எதனை கொள்வனவு செய்கின்றோம் என்பது எங்களுக்கு தெரியாது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment