பிளாஸ்டிக்கை உணவாக உட்கொண்டு வாழும் புழுக்கள் இனம் கண்டுபிடிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 11, 2022

பிளாஸ்டிக்கை உணவாக உட்கொண்டு வாழும் புழுக்கள் இனம் கண்டுபிடிப்பு

சுற்றுசூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் பிளாஸ்டிக்கை உட்கொண்டு வாழும் புழுக்கள் இனம் ஒன்று, பிளாஸ்டிக் மறுசுழற்சியில் புரட்சியை ஏற்படுத்த உதவும் என, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஜோபோபாஸ் மோரியோ (Zophobas morio) என்ற புழுக்கள் இனம், பாலிஸ்டீரைன் எனப்படும் பிளாஸ்டிக்கை உட்கொண்டு வாழ்கிறது என்பதை அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளனர்.

இந்தப் புழுக்களின் குடலில் உள்ள நொதிகளின் வாயிலாக அவை பிளாஸ்டிக்கை செரித்து வாழ்வதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

இந்தப் புழுக்களின் இத்தகைய தன்மை, பிளாஸ்டிக் மறுசுழற்சியில் முன்னேற்றம் அடைவதற்கு குறிப்பிடத்தக்கது என, இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியர்களுள் ஒருவரான டாக்டர் கிறிஸ் ரிங்க் தெரிவித்தார்.

"இந்த புழுக்கள் ஒரு சிறிய மறுசுழற்சி ஆலைகளை போன்று செயல்படுகிறது. அவை பாலிஸ்டீரைனை துண்டுகளாக்கி, அவற்றை தன் குடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கு அனுப்புகிறது" என, அவர் தெரிவித்தார்.

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட குயின்ஸ்லாந்து பல்கலைக்கழக குழுவினர், இப்புழுக்களை மூன்று குழுக்களாக பிரித்து அவற்றுக்கு மூன்று வார காலத்திற்கு வெவ்வேறு விதமான உணவுகளை வழங்கிவந்தனர். இதில், பாலிஸ்டீரைனை உண்ட புழுக்களுக்கு எடை அதிகரித்தது தெரியவந்துள்ளது.

இப்புழுக்களின் குடலில் உள்ள சில நொதிகளுக்கு பாலிஸ்டீரைன் மற்றும் ஸ்டீரைனை அழிக்கும் தன்மை உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவை இரண்டும் பிளாஸ்டிக் கண்டெயினர்கள், கார் பாகங்களில் காணப்படுகின்றன.

சவால்கள் என்ன?
ஆனால், பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும் ஆலைகளைவிட இரட்டிப்பாகும் அளவுக்கான புழு பண்ணைகளுக்கு இந்த ஆராய்ச்சி வழிவகுக்க சாத்தியமில்லை.

அதற்கு பதிலாக, அப்புழுக்களில் உள்ள எந்த நொதிக்கு இந்த தன்மை உள்ளது என்பதை கண்டறிவது குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், அதன் மூலம் அந்த நொதியை மறு உற்பத்தி செய்ய முடியும் என்கின்றனர்.

அதன் பின்னர், பிளாஸ்டிக்கை இயந்திரம் வாயிலாக துண்டுகளாக்கி, அந்த நொதியின் வாயிலாக மறுசுழற்சி செய்யலாம் என, மைக்ரோபையல் ஜீனோமிக்ஸ் ஆய்விதழில் வெளியான இந்த ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"இதன் மூலம் அதிக மதிப்புகொண்ட பயோ பிளாஸ்டிக்குகளை உருவாக்க இம்முறை பயன்படலாம்" என கிறிஸ் ரிங்க் தெரிவித்தார்.

இது தொடர்பான முந்தைய ஆராய்ச்சிகளில் இத்தகைய புழுக்களின் சில வகைகள் பாலிஸ்டீரைனை உட்கொள்ளும் என்பது தெரியவந்தது.

ஆனால், இந்த ஆராய்ச்சி அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளது என அவுஸ்திரேலிய நேஷனல் யுனிவர்சிட்டியின் ஆராய்ச்சியாளர் காலின் ஜாக்சன் தெரிவித்துள்ளார். இவர் இந்த ஆராய்ச்சிக் குழுவில் இடம்பெறாதவர்.

"இந்த புழுக்களின் குடலில் உள்ள பாக்டீரியாக்கள் மூலக்கூறு அளவில் இதனை எவ்வாறு செய்கிறது என்பதை புரிந்துகொள்வதற்கு இந்த ஆராய்ச்சி நீண்ட தூரம் செல்ல வேண்டும்," என பேராசிரியர் ஜாக்சன், அவுஸ்திரேலிய பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனுக்கு தெரிவித்துள்ளார்.

"பிளாஸ்டிக் மறுசுழற்சியில் இம்முறையை செயல்படுத்துவதற்கு மேற்கூறியதை அறிந்துகொள்வது முக்கியம்," என அவர் தெரிவித்தார்.

பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் ஆகியவை பிளாஸ்டிக்குகளை துண்டுகளாக்குவதற்கு பயன்படுத்துவதில் சர்வதேச அளவில் மற்ற ஆராய்ச்சியாளர்கள் வெற்றியடைந்துள்ளனர்.

ஆனால், இத்தகைய முறைகள் வணிக ரீதியாக சாத்தியமானதா என்பதில் சில கேள்விகள் எழுகின்றன.

"இத்தகைய ஆராய்ச்சியை நடைமுறையில் செயல்படுத்துவது எப்போதும் சவாலானாதாகவே இருக்கும். இத்தகைய முறைகளில் மறுசுழற்சி செய்யப்படும் பொருட்கள் (பயோ பிளாஸ்டிக்) எவ்வளவு மலிவானது என்பதன் அடிப்படையில் இவை சவாலானவை" என பேராசிரியர் ஜாக்சன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment