ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் கத்தி ஒன்றுடன் இஸ்ரேலிய படை வீரர் ஒருவரை அச்சுறுத்தியதாகக் கூறப்பட்ட பலஸ்தீன பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
கத்தியுடன் வந்த தாக்குதல்தாரி ஒருவர் இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர் ஒருவரை நோக்கி முன்னேறி வந்ததாகவும் பதில் நடவடிக்கையாக படையினர் சூடு நடத்தியதாகவும் இஸ்ரேலிய இராணுவம் குறிப்பிட்டது.
இந்த கூற்றை சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என்று ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஹெப்ரோனின் அருகில் இருக்கும் பலஸ்தீன நகரில் உள்ள மருத்துவமனை ஒன்று அந்தப் பெண்ணின் மரணத்தை உறுதி செய்தது.
அவர் சிறிய கத்தி ஒன்றுடன் சிறிய அளவு அச்சுறுத்தலாகவே இஸ்ரேலிய படையினருக்கு இருந்தார் என்று சம்பவத்தை பார்த்த ஒருவர் அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.
அல் அரூப் கிராத்திற்கு அருகில் கொல்லப்பட்ட 31 வயதான பெண் இந்த ஆண்டு ஆரம்பத்தில் சிறிது காலம் இஸ்ரேலிய சிறையில் இருந்தவர் என்று பலஸ்தீன கைதிகள் கழகம் குறிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன வன்முறை அண்மைய மாதங்களில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 01ஆம் திகதி தொடக்கம் இஸ்ரேலிய படையினரால் 59 பலஸ்தீனர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பலஸ்தீனர்கள் நடத்திய தாக்குதல்களில் கடந்த மார்ச் மாதம் தொடக்கம் 19 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment