நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி ஜனநாயகத்தை நிலைநிறுத்துவது அவசியம் : 21ஆவது திருத்தம் நிறைவேறியதும் புதியதொரு அரசியலமைப்பு : அனைத்து தரப்பினரும் இணங்கும் வகையில் உருவாக்கம் என்கிறார் விஜேதாச - News View

About Us

About Us

Breaking

Wednesday, June 1, 2022

நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி ஜனநாயகத்தை நிலைநிறுத்துவது அவசியம் : 21ஆவது திருத்தம் நிறைவேறியதும் புதியதொரு அரசியலமைப்பு : அனைத்து தரப்பினரும் இணங்கும் வகையில் உருவாக்கம் என்கிறார் விஜேதாச

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அனைத்துத் தரப்பினரும் இணங்கக் கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்க முடியுமென நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

21ஆவது அரசியலமைப்பு சட்ட மூலம் நிறைவேற்றப்படுவதையடுத்து அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி நாட்டில் ஜனநாயகத்தைப் பலப்படுத்த முடியுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

உத்தேச 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா ராமான்ய மகா நாயக்க தேரர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வின் போது அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி நிலைமைகள், 21ஆவது அரசியலமைப்பு திருத்தம் மற்றும் அது தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது நீதியமைச்சரால் மகாநாயக்க தேரருக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர், 2015ஆம் ஆண்டு 19ஆவது அரசியல் திருத்தத்தின் மூலம் சுயாதீன ஆணைக்குழுக்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் அந்த சுயாதீன ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தப்படுவது தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றன. அதற்கமைய 21ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்படும் போது அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படுவதுடன் அதன்மூலம் ஜனநாயகத்தையும் பலப்படுத்த முடியும்.

அந்த வகையில் 21ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்தை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளோம். அதற்கு இடைப்பட்ட நாட்களில் அச் சட்டமூலம் தொடர்பில் மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் தெளிவுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அரசியல் செய்வதற்கு நாடு ஒன்று அவசியமாகும். அந்த வகையில் நாட்டில் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கு அனைவரும் கட்சி, அரசியல் பேதங்களின்றி ஒன்றிணைவது அவசியம் என்றும் இதன்போது மகாநாயக்க தேரர் நீதியமைச்சரிடம் அறிவுறுத்தியுள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

No comments:

Post a Comment