பாலமுனை வைத்தியசாலைக்கு முன்னால் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் இடம்பெற்ற அமைதியற்ற சம்பவத்தில், பாலமுனையைச் சேர்ந்த நபர் ஒருவர் துப்பாக்கிச் சுட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த சம்பவம் நேற்றிரவு (05) இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில், பொலிஸாரின் உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நபர் ஒருவரும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற அமைதியற்ற நிலையின்போது, பொதுமக்களின் தாக்குதலுக்குள்ளான அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) உள்ளிட்ட 11 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாலமுனை வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியின் ஊடாக மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் இல்லாமல் சென்று கொண்டிருந்த நபரை பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிசார் நிறுத்த முற்பட்ட போது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றுள்ளதால் ஏற்பட்ட வாய்த்தகராறின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளில் சென்றவருக்கும் பாதுகாப்பு கடமையில் இருந்தவர்களுக்குமிடையே இடம்பெற்ற தகராறில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் படுகாயமடைந்ததால் ஆத்திரமுற்ற பொதுமக்கள் பொலிஸ் சோதனைச் சாவடியை தாக்கி தீ வைத்துள்ளனர்.
இதன்போது பொதுமக்களுக்கும் பாதுகாப்பு கடமையில் இருந்தவர்களுக்கும் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைக்காக ஸ்தலத்திற்கு விரைந்த அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட குழுவினரையும் தாக்க முற்பட்டபோது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமுற்ற நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் பொதுமக்களால் தாக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்டோரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸ் உயர்மட்டக்குழு சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணைகள் இடம்பெறும் என உறுதியளித்ததையடுத்து பொது மக்கள் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
பொலிஸ் சார்ஜென்ட் உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு படை வீரர்கள் 3 பேர் நேற்று (05) இரவு 10.30 - 11.00 மணியளவில் கல்முனை - அக்கரைப்பற்று வீதியில் பாலமுனை சோதனைச் சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில், நபர் ஒருவர் தலைக்கவசம் அணியாமல் பொலிஸாரின் கட்டளையை மீறி வேகமாகச் சென்ற நிலையில், மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் வீதியில் சறுக்கி வீழ்ந்து காயமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
இவ்வாறு மோட்டார் சைக்கிளில் சென்று காயமடைந்தவர் 39 வயதான, அட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், அவர் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குறித்த நபர் மதுபோதையில் இருந்தமை வைத்தியசாலை அறிக்கையில் தெரிய வந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் கோபமடைந்த பிரதேசவாசிகள் சோதனைச் சாவடியில் கடமையிலிருந்த பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டு, சோதனைச் சாவடிக்கு தீ வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து குறித்த பகுதிக்கு சென்ற அக்கரைப்பற்று பொலிஸ் பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் மீது, அங்கு குழுமியிருந்து 600 - 700 பேர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
அதன் பின்னர் அங்கு வந்த உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் தலைமையில் சென்ற குழுவினர் மீதும் தாக்குதல் மேற்கொண்டதாகவும், இதன்போது பொலிஸார் ஒருவர் மீது கடுமையான தாக்குதல் மேற்கொண்டு அவரது கழுத்தை நெரிக்க முற்பட்டதாகவும், இதன்போது நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 31 வயதான பாலமுனையைச் சேர்ந்த நபர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, நிஹால் தல்தூவ மேலும் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் 8 பொலிஸ் உத்தியோகத்தர்கள் 3 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் காயமடைந்து, அக்கரைபற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் மேலதிக சிகிச்சைக்காக அம்பாறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சட்டவிரோதமாக ஒன்றுகூடியமை, அமைதியற்று நடந்து கொண்டமை, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குறித்த குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென, நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மாஅதிபரினால் (DGI) உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் (ASP) தலைமையில் பொலிஸ் விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment