ஹர்த்தால் நடவடிக்கையில் பங்கேற்கும் அரச ஊழியர்களின் மே மாத சம்பளம் வழங்கப்படாது என, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் கடித தலைப்பைப் பயன்படுத்தி பேஸ்புக்கில் வெளியிடப்பட்டு வரும் பிரசாரம் உண்மைக்குப் புறம்பானது என, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் இன்றையதினம் (06) ஹர்த்தால் முழு அடைப்பு நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில், மே 03ஆம் திகதி திகதியிடப்பட்ட ஜனாதிபதி ஊடகப் பிரிவு கடித தலைப்பை பயன்படுத்தி வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்று சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
குறித்த அறிவித்தலில், மே 06ஆம் திகதி ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபடும் அரச ஊழியர்களின் மே மாதத்திற்கான சம்பளத்தை வழங்காதிருக்க, பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அத்தியாவசிய சேவையை தொடர்ச்சியாக மேற்கொள்ளும் பொருட்டும், நாட்டிலுள்ள நெருக்கடி நிலைமைக்கு மத்தியில், பணிப் பகிஷ்கரிப்பு காரணமாக அரச பொருளாதாரத்தை வீழ்ச்சியடையச் செய்யும் இந்நடவடிக்கையை தடுக்கும் நோக்கில் குறித்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதாக அரச நிர்வாக அமைச்சு அறிவிப்பதாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலகம் பொது நிர்வாக அமைச்சுக்கு இவ்வாறானதொரு அறிவிப்பை விடுக்கவில்லையெனவும், இது ஒரு பொய்ப் பிரசாரம் எனவும், இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment