தாய்வான் தனது வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் சீனா அனுப்பிய 30 போர் விமானங்களை எச்சரித்துத் தடுப்பதற்காக தனது போர் விமானங்களை நிலை நிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை நடந்த இந்தச் சம்பவம் ஜனவரி மாதத்திற்குப் பிறகு நடந்துள்ள மிகப் பெரிய ஊடுருவலாகக் குறிப்பிடப்படுகிறது.
தாய்வான் மீது சீனா படையெடுக்கக் கூடாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சீனாவை எச்சரித்த சில நாட்களுக்குப் பிறகு இது நடந்துள்ளது. அதே நாளில் அமெரிக்க அதிகாரி ஒருவர் தாய்வான் தலைவர்களுடன் பாதுகாப்பு குறித்துக் கலந்தாலோசிக்க அந்நாட்டிற்கு விஜயம் செய்தார்.
கடந்த சில மாதங்களில் சீனா தனது வான் வழி ஊடுருவல்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது. அதோடு, அவற்றை பயிற்சிகள் என்றும் கூறுகிறது.
இத்தகைய நகர்வுகள், தாய்வானை கோபப்படுத்தியதோடு, அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தையும் அதிகரித்துள்ளது.
தன்னிடம் இருந்து பிரிந்து சென்ற மாகாணமாகவும் தேவை ஏற்பட்டால், அதை பலவந்தமாக மீண்டும் இணைக்கலாம் என்ற வகையிலுமே சீனா தாய்வானை பார்க்கிறது.
சமீபத்திய ஊடுருவல் சம்பவத்தில் 22 போர் விமானங்கள், மின்னணு போர்முறைக்கான கருவிகள், நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள் ஆகியவை பங்கேற்றன என்று தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சகம் வழங்கிய வரைபடத்தின்படி, தாய்வானின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்தின் ஒரு பகுதியான பிரதாஸ் தீவுகளின் வட கிழக்கே ஒரு பகுதியில் சீன விமானம் பறந்தது.
ஆனால், விமானங்கள் தாய்வானின் வான்வெளிக்குள் நேரடியாக நுழையவில்லை. அப்படிச் செய்திருந்தால், அது பதற்றத்தை உருவாக்கும் செயலாகக் கருதப்பட்டிருக்கும்.
ஒரு வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் (air defence identification zone) என்பது ஒரு நாட்டின் நிலப்பரப்பு மற்றும் தேசிய வான்வெளிக்கு வெளியே இருக்கும் ஒரு பகுதி.
ஆனால், வெளிநாட்டு விமானங்கள் இங்கு தேசிய பாதுகாப்பு நலனுக்காக அடையாளம் காணப்பட்டு, கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகின்றன.
இந்தப் பகுதி, சர்வதேச வான் வெளியாக இருந்தாலும், வான் பாதுகாப்பிற்காக அந்தப் பகுதியைத் தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருப்பதாக தாய்வான் அறிவித்துள்ளது.
தாய்வான் ஓராண்டுக்கும் மேலாக சீன விமானங்கள், அதன் வான் பாதுகாப்பு அடையாள மண்டலத்திற்குள் பறக்கின்றன. இந்த ஊடுருவல்கள், தாய்வான் அரசாங்கம் முறையான சுதந்திர பிரகடனத்தை நோக்கி நகர்வதற்கு எதிரான ஓர் எச்சரிக்கை என்று ஆய்வாளர்கள் முன்பு கூறியுள்ளனர்.
கடந்த காலங்களில், தனது இறையாண்மையைப் பாதுகாப்பதற்கான பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக, சீனா தெரிவித்திருந்தது.
கடந்த வாரம் அதிபராக ஜோ பைடன் மேற்கொண்ட ஆசிய பயணம் முடிவடைந்த போது, சீனாவின் வான்வழி ஊடுருவல்களைக் குறிப்பிட்டார்.
தாய்வானுக்கு "ஏற்கெனவே மிக அருகில் பறப்பதன் மூலம் சீனா ஆபத்தோடு விளையாடுகிறது" என்று பைடன் கூறினார்.
மேலும், "பெய்ஜிங் தாய்வானை ஆக்கிரமித்தால் அமெரிக்க ராணுவத்திற்குப் பதிலளிக்கத் தயாராக இருக்க வேண்டும்," எனக் கூறியதன் மூலம், சீனாவுக்குத் தனது வலுவான எச்சரிக்கையையும் விடுத்திருந்தார்.
அவருடைய வார்த்தைகள், தாய்வான் மீதான அமெரிக்காவின் நீண்ட கால கொள்கையான ராஜ்ஜீய ரீதியிலான தெளிவின்மையில்" மாற்றத்தைக் குறிப்பதாகத் தோன்றியது.
சீனா, தாய்வான் அமெரிக்காவோடு கூட்டு சேர்வதை எச்சரிக்கும் வகையில், கடந்த வாரம் தாய்வானைச் சுற்றி ஒரு ராணுவ பயிற்சியை மேற்கொண்டதாகக் கூறியது.
தாய்வான் அதிபர் சாய் இங்-வென்னுடன் பிராந்திய பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பான விஷயங்களைப் பற்றி விவாதிக்க அமெரிக்க செனெட்டர் டேம்மி டக்வர்த் முன்னறிவிப்பின்றி வருகை தந்தபோது, திங்கட்கிழமையன்று இந்த ஊடுருவல் நடைபெற்றது.
சீனா - தாய்வான் உறவிலுள்ள சிக்கலின் அடிப்படை
சீனாவுக்கும் தாய்வானுக்குமான உறவு மோசமாக இருப்பது ஏன்?
சீனாவும் தாய்வானும் 1940 களில் உள்நாட்டுப் போரின் போது பிளவுபட்டன. ஆனால், பெய்ஜிங் ஒரு கட்டத்தில் அது மீண்டும் தன்னோடு இணைக்கப்படும் என்று கூறியது. அதைத் தேவைப்பட்டால் பலவந்தமாகக் கூடச் செய்வதாகவும் கூறியது.
தாய்வான் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது?
தாய்வானுக்கு என சொந்த அரசியலமைப்பு உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் மற்றும் அதன் ஆயுதப் படைகளில் சுமார் 3,00,000 துருப்புகள் உள்ளன.
தாய்வானை யார் அங்கீகரிப்பது?
சில நாடுகள் மட்டுமே தாய்வானை அங்கீகரிக்கின்றன. பெய்ஜிங்கில் உள்ள சீன அரசாங்கத்தை பெரும்பாலானவர்கள் அங்கீகரிக்கின்றனர். தாய்வானுடன் அமெரிக்காவுக்கு அலுவல்பூர்வ உறவுகள் எதுவுமில்லை. ஆனால், தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளை அந்தத் தீவுக்கு வழங்க வேண்டும் என்ற வகையிலான சட்டம் அமெரிக்காவில் உள்ளது.
No comments:
Post a Comment