சஜித் பிரேமதாச சவாலை ஏற்க முன்வரவில்லை : ஜனாதிபதி முன் பதவியேற்கும் போது அருவருப்பாக இருந்தது : கோட்டா கோ கோம் நிலைப்பாட்டில் மாற்றமில்லை : பஸிலோ வேறு நபர்களோ தலையிட்டால் வெளியேறுவேன் - ஹரீன் பெர்னாண்டோ - News View

About Us

About Us

Breaking

Friday, May 20, 2022

சஜித் பிரேமதாச சவாலை ஏற்க முன்வரவில்லை : ஜனாதிபதி முன் பதவியேற்கும் போது அருவருப்பாக இருந்தது : கோட்டா கோ கோம் நிலைப்பாட்டில் மாற்றமில்லை : பஸிலோ வேறு நபர்களோ தலையிட்டால் வெளியேறுவேன் - ஹரீன் பெர்னாண்டோ

சஜித் பிரேமதாச தூய்மையான அரசியல் தலைவர். அவரை நான் குறைகூற விரும்பவில்லை. ஆனாலும் சவாலை ஏற்க அவர் முன்வரவில்லையென்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதி முன்னிலையில், நான் பதவியேற்கும் போது அருவருப்பாக இருந்தது. நான் முகம் பார்க்கவில்லை. அதனால்தான் புகைப்படம் கூட எடுக்கவில்லை. எனினும், நாட்டுக்காக அதனை செய்தோம். 'ஜனாதிபதி' என்ற பதவிநிலையை மதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்ட பின்னர் ஹரீன் பெர்னாண்டா இன்று (20) ஊடக சந்திப்பொன்றை நடத்தினார்.

இந்த ஊடக சந்திப்பில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட மனுச நாணயக்காரவும் பங்கேற்றிருந்தார்.

இந்த ஊடக சந்திப்பில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ மேலும் தெரிவிக்கையில், “கோட்டா கோ கோம் என்ற நிலைப்பாட்டில் எனக்கு சிறிதளவேனும் மாற்றம் இல்லை. சஜித் பிரேமதாச தூய்மையான அரசியல் தலைவர். அவரை நான் குறைகூற விரும்பவில்லை. ஆனாலும் சவாலை ஏற்க அவர் முன்வரவில்லை.

பொருளாதார சூறாவளியில் சிக்கியுள்ள நாட்டை பாதுகாப்பாக கரைக்குக் கொண்டு செல்லும் சவாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுள்ளார். அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவே நாம் இந்த தீர்மானத்தை எடுத்தோம்.

இது ஒரு அரசியல் தற்கொலை முயற்சி. ஆனால் நாட்டின் நெருக்கடியை தீர்க்கும் முயற்சிக்கு ஒத்துழைக்க முன்வந்துள்ளேன். கோட்டாவை வெளியில் அனுப்ப வேண்டும். அதை ஜனநாயக அணுகுமுறைக்குள் மேற்கொள்ள வேண்டும். சூறாவளி ஒன்றில் சிக்கிய படகில் செல்கிறேன் நான். எனது கப்டன் படகை செலுத்த மறுக்கிறார் . அப்படியானால் துணிந்து வந்த கப்டனுடன் நான் செல்ல வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியில் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் உள்ளனர். ஹர்ஷ டி சில்வா போன்றோர் பொறுப்பை ஏற்று நாட்டுக்காக செயற்பட வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட நிலைப்பாடாகும்.

இடைக்கால அரசாங்கத்தில் பொறுப்பினை ஏற்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஐவரின் பெயரையாவது பரிந்துரைக்குமாறு ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்தோம். எனினும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இதேவேளை, கட்சிக்காகவே நான் அமைச்சுப் பதவியை ஏற்றேன். கட்சியுடனேயே தொடர்ந்தும் பயணிக்க எதிர்பார்க்கின்றேன். சவாலை ஏற்று, மூன்று மாதங்கள் அமைச்சராக செயற்படுவேன், மாத சம்பளமோ, வாகனங்களோ, அலுவலகங்களோ உள்ளிட்ட எவ்வித சலுகைகளையும் நான் எதிர்பார்க்கவில்லை.

நான் ஜனாதிபதி கோட்டாபயவை பாதுகாக்க முற்படவில்லை. அவர் பதவி விலகியாக வேண்டும் என்ற விடயத்தில் நான் உறுதியாக இருக்கின்றேன். பஸிலோ வேறு நபர்களோ தலையிடமுற்பட்டால் நான் வெளியேறுவேன்.

நான் ஜனாதிபதி முன், பதவியேற்கும் போது அருவருப்பாக இருந்தது. ஜனாதிபதியின் முகத்தைக் கூட பார்க்கவில்லை. அதனால்தான் புகைப்படம் எடுக்கவில்லை. எனினும், நாட்டுக்காக அதனை செய்தோம். “ஜனாதிபதி' என்ற பதவிநிலையை மதிக்க வேண்டும்.

நாடு ஸ்தீரமடைந்த பின்னர் ஜனாதிபதி பதவி விலகுவார் என நம்புகின்றேன். 19 ஆவது அரசியலமைப்பு அமுலாகும் என்ற உறுதிமாழியுடன்தான் பதவி ஏற்றேன்.

நான் கட்சியை காட்டிக் கொடுக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை உள்ளிட்ட நிபந்தனைகளும் நான் பதவியை ஏற்கும் போது முன்வைக்கப்பட்டுள்ளன என ஹரீன் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment