நாடொன்றின் தலைவரோ அன்றி முன்னாள் தலைவரோ என்ன கூறுகிறார் என்பதை முழு உலகமே உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருக்கும் என்பது எவரும் அறியாதது அல்ல. அதிலும் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளின் தலைமைத்துவத்தில் இருப்பவர்கள் அல்லது இருந்தவர்கள் வெளியிடும் ஒவ்வொரு வார்த்தையும் முக்கியத்துவம் மிக்கதாக இருக்கும்.
இந்நிலையில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அந்நாட்டு நேரப்படி நேற்று புதன்கிழமை உக்ரேன் மீதான ரஷ்யாவின் போர் குறித்து அமெரிக்க டலஸ் பிராந்தியத்திலுள்ள தனது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார்.
அவர் இதன்போது உணர்வுபூர்வமான கருத்துகளை முன்வைத்து ஆக்ரோஷமாக உரையாற்றினார்.
இந்நிலையில் அவர் ஒரு கட்டத்தில் தன்னை மறந்து ரஷ்யாவின் உக்ரேன் மீதான படையெடுப்பை ஈராக் மீதான படையெடுப்பு எனத் தவறுதலாக குறிப்பிட்டு ஈராக் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு முற்றிலும் நியாயப்படுத்த முடியாத மிருகத்தனமான படையெடுப்பு எனத் தெரிவித்து அங்கிருந்தவர்கள் அனைவரையும் திகைப்பில் விழி பிதுங்க வைத்துள்ளார்.
இந்நிலையில் உடனடியாக தனது தவறை உணர்ந்து கொண்டு தனது தலையைக் குலுக்கி தான் கூறியதை உடனடியாக மறுத்த ஜோர்ஜ் டபிள்யூ புஷ், தான் உக்ரேனையே தவறுதலாக ஈராக் எனக் குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
அவர் இவ்வாறு கூறவும் அங்கிருந்தவர்கள் மத்தியில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.
2003 ஆம் ஆண்டு ஈராக் மீதான அமெரிக்காவின் படையெடுப்பிற்கு உத்தரவிட்டதன் மூலம் பலரதும் கண்டனத்திற்குள்ளாகியுள்ள ஜோர்ஜ் டபிள்யூ புஷ், தற்போது ஈராக் மீதான படையெடுப்பொன்றிற்கு தானே தவறுதலாக கண்டனம் தெரிவித்தமை குறித்து பலரதும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளார்.
ஈராக்கிய முன்னாள் தலைவர் சதாம் ஹுஸைனுக்கு அல் கொய்தா தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக குற்றஞ்சாட்டி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷால் ஈராக் மீதான படையெடுப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில, அந்தக் குற்றச்சாட்டு பொய்யானது என பின்னர் அறியப்பட்டது.
ஈராக் போரில் அமெரிக்கா பங்கேற்றதால் 4,825 க்கு மேற்பட்ட கூட்டமைப்புப் படையினர் கொல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment