(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
நாட்டுக்கு தேவையான முக்கியமான இரண்டு வகை மருந்து பொருட்களை ஐக்கிய மக்கள் சக்தியின் மூச்சு வேலைத்திட்டம் மூலம் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில் எதிர்க்கட்சி தமது பங்களிப்பை வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் நாட்டில் தட்டுப்பாடு நிலவும் மருந்துப் பொருட்கள் மருத்துவ உபகரணங்கள், பாடசாலை உபகரணங்களை வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை எதிர்க்கட்சி நடைமுறைப்படுத்தி வருகிறது.
அந்த திட்டத்தின் கீழ் இதுவரை அரச வைத்தியசாலைகள் 50 க்கு 138 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் 153 இலட்சம் ரூபா பெறுமதியான கணினி உட்பட கல்வி உபகரணங்கள் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் நேற்று சபையில் முக்கியமான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு இருப்பதாகவும் அதில் ஒரு மருந்தையாவது எமது கட்சியின் மூச்சு வேலைத்திட்டத்தின் ஊடாக பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கமைய உயிர் பாதுகாப்புக்கு முக்கிய 2 வகை மருந்து பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது.
அந்த வகையில் வைத்தியசாலைகளுக்கு மருந்து மற்றும் உபகரணம் வழங்கும் எமது வேலைத்திட்டத்தின் மூலம் அடுத்த வாரம் 37 மில்லியன் ரூபா பெறுமதியான உயிர் பாதுகாப்பு மருந்து மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம்.
இந்த மருந்து பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், ஆதரவாளர்கள், வெளிநாடுகளில் வசிப்போர் மற்றும் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையா்கள் உதவி செய்து வருகின்றனர் என்றார்.
இதற்போது எழுந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எமது கோரிக்கையை ஏற்றுக் கொண்டு மருந்து பொருட்களை பெற்றுத்தர முன்வந்த எதிர்க்கட்சித் தலைவருக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.
இது சிறந்த ஆரம்பம். இதுபோன்று அடுத்த நடவடிக்கைகளுக்கும் வேறு அமைப்புகள் முன்வரும் என எதிர்பார்க்கின்றேன் என்றார்.
No comments:
Post a Comment