மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் தொடர்ந்து இருக்குமாறு கூறி முன்னெடுக்கப்பட்ட ஆதரவு வன்முறைகளைத் தொடர்ந்து, வீடு திரும்பிக் கொண்டிருந்த ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள நிட்டம்புவயில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் இடையே சிக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர் அடித்து கொலை செய்யப்பட்டிருப்பதற்கான அறிவியல் சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலேயே, கொலை குற்றச்சாட்டின் கீழ் குறித்த 7 பேரும் சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலை விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் இருவர் முன்னாள் இராணுவ வீரர்களாவர்.
அமரகீர்த்தி அத்துகோரள, அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் காரர்களிடையே சிக்கிக் கொண்டுள்ள நிலையில், தன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கடந்த 9 ஆம் திகதி மாலை சம்பவம் இடம்பெற்றதும் தகவல்கள் வெளியான போதும், பிரேத பரிசோதனை அறிக்கை பிரகாரம், கடுமையாக தாக்கப்பட்டமையால் எலும்புகள் சிதைவடைந்து உள்ளக இரத்தக் கசிவு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
அத்தனகல்ல ஆதார வைத்தியசாலையில் சட்ட வைத்திய அதிகாரி ரொமேஷ் அழகியவண்ண முன்னெடுத்த பிரேத பரிசோதனைகளின் அடிப்படையில் இந்த விடயம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் உயிரிழந்த பாராளுமன்ற உறுப்பினரின் சடலத்துக்கு அருகே இருந்து சடலமாக மீட்கப்பட்ட அவரது மெய்ப்பாதுகாவலரான அஹங்கம விதானகே ஜயந்த குணரத்ன எனும் பொலிஸ் சார்ஜனின் மரணமும் தற்கொலை அல்ல என பிரேத பரிசோதனையூடாக தெரியவந்துள்ளது.
அவரது சடலம் மீதும் சட்ட வைத்திய அதிகாரி ரொமேஷ் அழகியவண்ண பரிசோதனைகளை முன்னெடுத்திருந்தார். பொலிஸ் சார்ஜனின் சடலத்தில் துப்பாக்கிச் சூட்டு காயம் காணப்பட்டுள்ளதுடன், மேலும் பல காயங்களும் அவதானிக்கப்பட்டுள்ளன.
துப்பாக்கி குண்டு அவரின் மார்பு வழியே நுரையீரலை துழைத்துக் கொண்டு உடலின் மறுபக்கமாக வெளியேறியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதுடன் அந்த காயமும், தலையில் பலமாக தாக்கப்பட்டமையால் மண்டை ஓடு வெடித்து மூலைக்குள் இரத்தம் கசிந்தமையும் அவரது மரணத்துக்கு காரணம் எனவும் பிரேத பரிசோதனை அறிக்கை ஊடாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் இது குறித்த விசாரணைகள் நிட்டம்புவ பொலிஸ் நிலையத்திடமிருந்து சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டடது. அதன்படியே சி.ஐ.டி.யின் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரின் கீழான குழுவினர் இவ்விசாரணைகளை நடாத்துகின்றனர்.
இந்நிலையில், இன்று (20) சி.ஐ.டி.யினர் 7 ஆவது சந்தேக நபராக நிட்டம்புவ பகுதி பஸ் சாரதி ஒருவரைக் கைது செய்துள்ளனர். 29 வயதான குறித்த சந்தேக நபர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரை பொல்லுகளால் தாக்கும் சி.சி.ரி.வி. காணொளி சாட்சிகளை மையப்படுத்தி அவரைக் கைது செய்ததாக விசாரணைகளுக்கு பொறுப்பான சி.ஐ.டி. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஏற்கனவே, கொலையின் பின்னர் பாதுகாப்பு உத்தியோகத்தரின் துப்பாக்கியை கொள்ளையிட்டு உடன் வைத்திருந்த, நிட்டம்புவ பகுதி நபர் ஒருவரையும் சி.ஐ.டி.யினர் கைது செய்து துப்பாக்கியையும் மீட்டிருந்த நிலையில், தற்போது இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில், கடந்த 9 ஆம் திகதி அமைதி ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் பொலன்னறுவை நோக்கி வாகனத்தில் சென்றுள்ளார்.
இதன்போது அவரது வாகனம் நிட்டம்புவையில், கொழும்பு - கண்டி வீதியை மறித்து பொதுமக்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் இடையே சிக்கியுள்ளது. இதனையடுத்து ஆர்ப்பாட்டக் காரர்கள் பாராளுமன்ற உறுப்பினரை தாக்க முயலவே, பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் ஆர்ப்பாட்டக் காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தியதாக அறிய முடிகிறது.
இதனால் மூன்று பொதுமக்கள் துப்பாக்கிச் சூட்டு காயத்துக்கு உள்ளாகியுள்ளதுடன் அதில் ஒருவர் வைத்தியசாலையில் வைத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.
துப்பாக்கிச் சூட்டையடுத்து நிலைமை மோசமடைந்துள்ளது. அங்கிருந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் துப்பாக்கிச் சூட்டை அடுத்து ஆவேசமடைந்துள்ளனர்.
இதன்போது, பாராளுமன்ற உறுப்பினரும் அவரது சாரதியும், நிட்டம்புவ நகரின் நிஹால் பெஷன் ஆடையகத்தினுள் ஓடி ஒழிந்துள்ளனர். எவ்வாறாயினும் ஆர்ப்பாட்டக் காரர்கள் தொடர்ச்சியாக விரட்டி சென்றுள்ள நிலையில், அவரது சடலமும் அவரது மெய்ப்பாதுகாவலரின் சடலமும் பின்னர் மீட்கப்பட்டன.
இந்நிலையிலேயே முன்னெடுக்கப்பட்ட பிரேத பரிசோதனைகளில் அவை இரண்டும் கடுமையான தாக்குதல்களால் நிகழ்ந்த மரணங்கள் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment