இலங்கையின் 24ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவும், பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியாக ஷவேந்திர சில்வாவும் நியமனம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 31, 2022

இலங்கையின் 24ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேவும், பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியாக ஷவேந்திர சில்வாவும் நியமனம்

இலங்கையின் 24ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து, ஜனாதிபதியினால் விக்கும் லியனகேவிடம் இந்நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.

தற்போது இராணுவத்தில் சிரேஷ்ட அதிகாரியாக இருக்கும் விக்கும் லியனகே, நாளை (ஜூன் 01) இராணுவத் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொள்வதன் மூலம், லெப்டினன் ஜெனரலாக பதவி உயர்வு பெறவுள்ளார்.

மாத்தளை விஜய கல்லூரியில் கல்வி கற்ற விக்கும் லியனகே, 1986ஆம் ஆண்டு ஒக்டோபர் 27ஆம் திகதி இலங்கை இராணுவத்தில் கெடட் அதிகாரியாக இணைந்தார். 

விக்கும் லியனகே, தியத்தலாவ இலங்கை இராணுவ கல்விக் கல்லூரி மற்றும் பாகிஸ்தான் இராணுவ அகடமி ஆகியவற்றிலிருந்து தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்று, இரண்டாவது லுதினனாக கஜபா படைப் பிரிவுக்கு நியமிக்கப்பட்டார்.

விக்கும் லியனகே, தனது 35 வருட புகழ்பெற்ற இராணுவப் பணியின் போது, 4ஆவது கஜபா படைப்பிரிவின் ​​கட்டளை அதிகாரி, படையணி கட்டளை அதிகாரி, கட்டளை அதிகாரி, பலசேனா, சேனாங்க, பாதுகாப்புப் படை கட்டளை பதவி உள்ளிட்ட பதவி நிலை பதவிகள் மற்றும் பல்வேறு ஆலோசகர் பதவிகளையும் வகித்துள்ளார். 

அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பாதுகாப்பு மற்றும் தொழில் பயிற்சி பாடநெறிகளைத் தொடர்ந்துள்ளார்.

லியனகே மனிதாபிமான நடவடிக்கையின் போது 57 மற்றும் 56ஆவது படையணிகளின் 8ஆவது கஜபா படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்ததோடு, எல்ரிரிஈ பயங்கரவாதத்திற்கு எதிராக பல்வேறு வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார். 

ரணவிக்ரம, ரணசூர பதக்கம், கிழக்கு மனிதாபிமான நடவடிக்கை பதக்கம், வடக்கு மற்றும் கிழக்கு நடவடிக்கை பதக்கம் உள்ளிட்ட பல பதக்கங்களை வென்றுள்ளார்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானி, ஜெனரல் ஷவேந்திர சில்வா நாளை (ஜூன் 01) முதல் பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று, (31) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் வைத்து ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் இந்த நியமனக் கடிதம் கையளிக்கப்பட்டது.

இராணுவத் தளபதியாகவும், பாதுகாப்புப் படைகளின் பதில் பிரதானியாகவும் செயற்பட்ட ஷவேந்திர சில்வா, இன்று (31) இராணுவத் தளபதி பதவியிலிருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பதவி நிலை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment