மலையக மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அடக்குமுறை முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் - வடிவேல் சுரேஷ் - News View

About Us

About Us

Breaking

Friday, March 25, 2022

மலையக மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அடக்குமுறை முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் - வடிவேல் சுரேஷ்

(நா.தனுஜா)

நாட்டின் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் மலையக மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். இருப்பினும் அரசாங்கமும் பெருந்தோட்டக் கம்பனிகளும் இணைந்து, அவர்களை அங்கிருந்து வெளியேற்றி புதியதொரு நாடகத்தை அரங்கேற்றுவதற்கு முயற்சிக்கின்றன. மலையக மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த அடக்குமுறை முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் வலியுறுத்தினார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (24 )ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறியதாவது, மனித உரிமை மீறல்களுக்கும் அப்பால்சென்று பெருந்தோட்டக் கம்பனிகளும் முதலாளிமார் சம்மேளனமும் மலையக மக்களை வஞ்சித்து வருகின்றது. அதேபோன்று மலையக மக்கள் காலங்காலமாக வாழ்ந்து வந்த பெருந்தோட்ட நிலங்களிலிருந்து அவர்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நாட்டின் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்கும் விவசாய நடவடிக்கைகளுக்கும் மலையக மக்கள் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். இருப்பினும் அரசாங்கமும் பெருந்தோட்டக் கம்பனிகளும் இணைந்து, அவர்களை அங்கிருந்து வெளியேற்றி புதியதொரு நாடகத்தை அரங்கேற்றுவதற்கு முயற்சிக்கின்றன.

அங்குள்ள மக்களை வெளியேற்ற முடியாத வகையிலான அறிவுறுத்தல் ஏற்கனவே நடைமுறையில் உள்ளபோதிலும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கான அறிவித்தல் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற மூன்று தசாப்தகாலப் போரினால் நாட்டின் அபிவிருத்தி 30 வருடங்கள் பின்னடைவைச் சந்தித்தது. அதேபோன்று நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்குப் பிரதான பங்களிப்பை வழங்கிய மலையக மக்கள் இன்றளவிலே பாரிய பின்னடைவைச் சந்தித்திருக்கின்றார்கள்.

மலையக மக்களின் இருப்பையோ, அவர்களின் நிலங்களையோ எம்மால் ஒருபோதும் விட்டுக் கொடுக்க முடியாது. எனவே அரசாங்கமும் பெருந்தோட்டக் கம்பனிகளும் இணைந்து மலையக மக்களுக்கு எதிராக முன்னெடுத்து வரும் இந்த அடக்குமுறை முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டும்.

நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியினால் மலையக மக்களே வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்குரிய எந்தவொரு நடவடிக்கையும் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலை உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரப்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.

No comments:

Post a Comment