நாட்டில் தற்போது நிலவிவரும் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு காலம் தாழ்த்தாது உடனடி தீர்வினை பெற்றுக் கொடுக்கக் கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி வழி சத்தியாகிரகப் போராட்டம் நேற்று மாலை கொழும்பு ஹைட் பார்க் திடலில் நடைபெற்றது.
இருண்ட எதிர்காலத்தை ஒளிரச் செய்தல் மற்றும் தேசிய இணக்கப்பாடு, தேசிய கொள்கை என்ற தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சத்தியாகிரகப் போராட்டமானது நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகி 5.30 மணி வரை நடைபெற்றது.
4 இடங்களிலிருந்து பேரணி
இவ்வாறு கொழும்புக்கு வந்த ஐ.தே.க. ஆதரவாளர்கள் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிலிருந்து ஒர் பேரணியும், டார்லி வீதியிலிருந்து ஓர் பேரணியும், கொம்பனித்தெரு சந்தி மற்றும் பிரேபுறூக் பிளேஸிலிருந்து ஓர் பேரணி என மொத்தமாக 4 இடங்களிலிருந்து வந்த பேரணி ஹைட் பார்க் திடலில் சங்கமித்தது.
வெள்ளை உடை அணிந்து வருகை
நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பிற்பகல் 2.30 மணியிலிருந்து ஹைட் பார்க் திடலுக்கு வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான ஐ.தே.க. ஆதரவாளர்கள் வெள்ளை உடையணிந்து இந்த சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.
பேரணியின்போது கலந்துகொண்டிருந்த ஐ.தே.க. ஆதரவாளர்கள் அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியும், அத்தியவசியப் பொருட்களின் விலையை அதிகரிக்காது, தட்டுப்பாடின்றி வழங்கக் கோரியும் கோஷம் எழுப்பியிருந்தனர்.
ஐ.தே.க முக்கிய புள்ளிகள் பங்கேற்பு
இந்த சத்தியாகிரகப் போராட்டத்திற்கு ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, தவிசாளர் வஜிர அபேரவர்தன, பிரதித்தலைவர் ருவன் விஜேவர்தன, விஜயகலா மகேஸ்வரன், அக்கில விராஜ் காரியவசம், பாலித்த தேவரப்பெரும, சாகல காரியவசம் உள்ளிட்டடோர் பங்கேற்றிருந்தனர்.
மேலும், கொழும்பு மாநகர சபையின் மேயர் ரோஸி சேனாநாயக்க, பிரதி மேயர் மொஹமட் இக்பால், மொஹமட் தாஜுடீன், மொஹமட் சராப்டீன் உள்ளிட்ட மாநகர சபை உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
சத்தியாகிரகப் போராட்டத்தின் பிரதானமாக சிங்கள பக்திப் பாடல்கள் சிறார்களால் பாடப்பட்டதுடன், பஜனைப் பாடல்கள் பாடப்பட்டதுடன், இசைக்கப்பட்டது. இந்த இசைகளுக்ககேற்ப அரசியல் தலைவர்களும் ஆதரவாளர்களும் கைகளை மடியில் தட்டியவாறு இருந்தனர்.
ரணில் உரையாற்றவில்லை
நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி, அத்தியவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் விலையேற்றம் ஆகியவற்றிக்கு கண்டித்தும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக தீர்வு வழங்ககோரி அமைதி வழியில் நடத்தப்பட்ட இந்த சத்தியாகிரக போராட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உரை நிகழ்த்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment