(நா.தனுஜா)
நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் மிக மோசமான நெருக்கடிக்கு தமது கொள்கைகளும் தீர்மானங்களுமே பிரதான காரணம் என்பதை ஏற்றுக் கொள்ளாத அரசாங்கம் நடத்துகின்ற சர்வ கட்சி மாநாட்டில் மாத்திரமல்ல, அதன் எந்தவொரு மாநாட்டில் கலந்துகொள்வதன் ஊடாகவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண முடியாது. அந்த மாநாட்டிற்குச் சென்று வெறுமனே தேநீரை மாத்திரம் அருந்திவிட்டு வருவதற்கு நாம் விரும்பவில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (24 ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வ கட்சி மாநாட்டில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும் கலந்துகொண்டிருந்தன. இருப்பினும் பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் நாங்கள் அந்த மாநாட்டைப் புறக்கணித்திருந்தோம்.
தற்போதைய நெருக்கடி நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான யோசனைகளை இவ்வாறான சர்வ கட்சி மாநாடொன்றிலேயே கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாடு எதிர்கொள்ளவிருக்கும் நெருக்கடிகள், அதனைக் கையாள்வதற்கான வழிமுறைகள் குறித்து நாம் கடந்த காலத்திலிருந்து தொடர்ச்சியாகக் கூறி வருகின்றோம்.
கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாகவே நாடு இத்தகைய நெருக்கடி நிலையை எதிர்கொண்டிருப்பதாக மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் குற்றஞ்சாட்டினார். ஆனால் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விரும்புபவர்கள், அவர்களது தவறுகளையும் அதனால் ஏற்பட்ட தாக்கங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் ஏற்கனவே கூறிய விடயங்களை அரசாங்கம் செவிமடுக்காத நிலையில், தற்போது சர்வ கட்சி மாநாட்டிற்குச் சென்று அந்த யோசனைகளை மீண்டும் கூறுவதில் பயனில்லை.
நாடு முகங்கொடுத்திருக்கின்ற மற்றும் எதிர்வரும் காலங்களில் முகங்கொடுக்கக் கூடிய நெருக்கடிகள் தொடர்பில் நாம் பல மாதங்களுக்கு முன்னர் சுட்டிக்காட்டினோம். அப்போது நாட்டில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை என்றும் எதிர்க்கட்சி நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்துவதற்கு முற்படுகின்றது என்றும் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கூறினார்கள்.
எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கு நாள் முழுவதும் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் மக்கள் உயிரிழக்கும் நிலையேற்பட்டிருக்கின்றது. பரீட்சைகளை நடத்துவதற்கு அவசியமான கடதாசிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதன் விளைவாக மாணவர்களால் அவர்களது கல்விச் செயற்பாடுகளை உரியவாறு முன்னெடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவசர பயணமொன்றை மேற்கொள்வதற்குக்கூட பெற்றோல் இல்லை.
இந்த நிலையேற்படுவதற்கு இடமளித்த அரசாங்கத்தின் சர்வ கட்சி மாநாட்டிற்குச் சென்று, வெறுமனே தேநீர் அருந்திவிட்டு வருவதற்கு நாம் விரும்பவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் கழிவைப்போன்ற எதிர்க்கட்சியுடன் தாம் இணைந்து கொள்ளப் போவதில்லை என்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கூறுகின்றார் ஆனால், கழிவாக மாறிய அரசியல்வாதிக்கு நாம் இடமளிக்கப் போவதில்லை என்று கூறிக்கொள்ள விரும்புகின்றோம். அத்தகைய நபர்களை இணைத்துக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தக்கு ஒருபோதும் பின்னடைவை ஏற்படுத்தமாட்டோம் என்றார்.
No comments:
Post a Comment