பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளுக்கமையவே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற தீர்மானம் : அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது - ரமேஷ் பதிரண - News View

About Us

About Us

Breaking

Friday, March 25, 2022

பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளுக்கமையவே சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற தீர்மானம் : அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது - ரமேஷ் பதிரண

(இராஜதுரை ஹஷான்)

பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளுக்கமையவே அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளது. அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. கூட்டணிக்குள் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு கண்டு பங்காளி கட்சிகளுடன் ஒன்றிணைந்து செயற்படவே எதிர்பார்க்கிறோம் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், கொவிட் தாக்கத்தின் பின்னரான காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ளதால் அத்தியாவசிய சேவை மற்றும் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கிறோம்.

எரிபொருள்,எரிவாயு ஆகிய சேவை விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கல் நிலைமை தற்போது கட்டம் கட்டமாக வழமைக்கு திரும்புவதை அவதானிக்க முடிகிறது.

நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி மக்களின் வெறுப்பினை பெற்றுக் கொள்ள ஆட்சியில் இருக்கும் எந்த அரசாங்கமும் விரும்புவதில்லை.

நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து நாட்டையும், நாட்டு மக்களையும் மீட்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. பொருளாதா நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு அரசாங்கம் அனைத்து தரப்பினரது ஆலோசனைகளையும் பெற்றுக் கொண்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்ளும் விவகாரத்தில் அரசாங்கத்திற்குள் ஆரம்பத்திலிருந்து இரு வேறுப்பட்ட நிலைப்பாடு காணப்பட்டது.

நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக் கொள்வது அவசியமற்றது என ஒரு தரப்பினரும், உதவியை பெற்றுக் கொள்ள வேண்டும் என பிறிதொரு தரப்பினரும் தொடர்ந்து யோசனைகளை முன்வைத்து வந்தனர்.

பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள பின்னணியில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் பெற்றுக் கொள்வது அத்தியாவசியமானது என அரசாங்கத்திற்குள் ஒரு தரப்பினர் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து பொருளாதார நிபுணர்களின் ஆலோசனைகளுக்கமைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள தீர்மானித்துள்ளதடன் அதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கததின் பெரும்பான்மையினை சிதைப்பதாக ஆளும் தரப்பின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகள் குறிப்பிட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்திற்கு எவவித பாதிப்பும் ஏற்படாது என்பதை தெளிவாக குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையிலான யோசனைகளை பங்காளி கட்சிகள் முன்வைத்தனர். பொருளாதார மீட்சிக்காக அவர்கள் ஆரம்பத்தில் முன்வைத்த யோசனைகள் இறுதியில் அரசியல் முரண்பாடுகளை தோற்றுவித்துள்ளது.

அரசாங்கத்தின் சிரேஷ்ட அரசியல்வாதியான அமைச்சர் வாசுதேச நாணயக்கார சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அரசாங்கம் பெற்றுக் கொள்ளக் கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

கூட்டணிக்குள் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளுக்கு தீர்வு கண்டு அவர்களுடன் ஒன்றினைந்து செயற்படவே தொடர்ந்து எதிர்பார்க்கிறோம். கூட்டணிக்குள் தோற்றம் பெற்றுள்ள முரண்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு அரசியல் இலாபம் தேடிக்கொள்ள எதிர்தரப்பினர் முயற்சிக்கிறார்கள் என்றார்.

No comments:

Post a Comment