(எம்.மனோசித்ரா)
பொருளாதார நெருக்கடிகளை காரணம் காட்டி தேசிய பாதுகாப்பையும் இறையான்மையையும் அரசாங்கம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கர்கள் அந்நாட்டின் தேவைக்கு ஏற்ப இலங்கையை ஆட்சி செய்கின்றமையே இந்த நிலைமைக்கு காரணமாகும். முதலில் இவர்கள் நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னிணியின் (ஜே.வி.பி.) உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் வெள்ளிக்கிழமை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்தியாவிடமிருந்து பெற்றுக் கொண்ட கடன் தொடர்பில் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம் குறித்து அரசாங்கம் நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். காரணம் இந்த ஒப்பந்தம் அமைச்சரவையின் அனுமதியின்றியே கையெழுத்திடப்பட்டுள்ளது.
இவ்வாற அவசரமாக இந்தியாவுடன் பாதுகாப்புடன் தொடர்புடைய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளமைக்கான காரணம் என்ன?
பொருளாதார நெருக்கடிகளை காரணம் காட்டி தேசிய பாதுகாப்பையும் இறையான்மையையும் அரசாங்கம் காட்டிக் கொடுத்துள்ளது.
யுத்தத்தின் போது கூட காணப்படாத டோனியர் கண்காணிப்பு தற்போது நாட்டுக்கு எதற்கு? இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை உபயோகித்துக் கொண்டு இலங்கையை கட்டுப்படுத்துவதற்கே ஏனைய நாடுகள் முயற்சிக்கின்றன.
அமெரிக்கர்கள் அந்நாட்டின் தேவைக்கு ஏற்ப இலங்கையை ஆட்சி செய்கின்றமையே இந்த நிலைமைக்கு காரணமாகும். இவர்களை முதலில் நாட்டிலிருந்து விரட்டியடிக்க வேண்டும்.
வடக்கு, கிழக்கில் கடும் யுத்தம் நிலவிய சந்தர்ப்பத்தில்கூட இலங்கை மீனவர்களுக்கு இவ்வாறான நெருக்கடி ஏற்படவில்லை.
மீனவர்களின் வலையை வெட்டி இந்திய மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஏன் இவ்விடயம் தொடர்பில் இந்திய விஜயத்தின் போது தெரிவிக்கவில்லை?
ஆரம்பத்தில் கொவிட் தொற்றினை காரணமாகக் காண்பித்து இவ்வாறு நாட்டைக் காட்டிக் கொடுத்த அரசாங்கம், தற்போது பொருளாதார நெருக்கடிகளை காரணம் காட்டி நாட்டை காட்டிக் கொடுக்கிறது.
எனவே மக்கள் இந்த சந்தர்ப்பத்தில் இது குறித்து சிந்தித்து செயற்பட வேண்டும். மாறாக ஒரு கொள்ளை கும்பலிடமிருந்து பிரிதொரு கும்பலிடம் ஆட்சியைக் கையளித்துவிடக் கூடாது என்றார்.
No comments:
Post a Comment