(நா.தனுஜா)
நாடு சுதந்திரமடைந்து 74 வருடங்களின் பின்னர் முதற்தடவையாக உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்குக் அயல் நாடுகளிடம் கையேந்த வேண்டிய நிலையேற்பட்டிருக்கின்றது. நாடு பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்களின் நலன் தொடர்பில் சிறிதும் அக்கறை காண்பிக்காத தற்போதைய அரசாங்கத்தின் ஒரேயொரு நோக்கம் ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்துக் கொள்வது மாத்திரமேயாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (25 ) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சி இன்றளவிலே நாட்டு மக்களை வீதிக்குத் தள்ளியுள்ளது. குறிப்பாக கடந்த காலங்களில் இடம்பெற்ற எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பதுடன் அவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் 'வியத்மக' அமைப்பைச் சேர்ந்தவர் என்பதுடன் ஜனாதிபதிக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதால் அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்படவில்லை.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிபீடமேறுவதற்கு முன்னர் இனம், மதம் மற்றும் நாட்டின் கௌரவம் தொடர்பில் பேசியது. ஆனால் தற்போது என்ன நேர்ந்திருக்கின்றது?
தேசிய பாதுகாப்பை வலுப்படுத்துவதாகக் கூறிய அரசாங்கம், இன்றளவிலே மக்கள் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ முடியாத சூழ்நிலையை உருவாக்கியிருக்கின்றது.
துப்பாக்கியைப் பகிரங்கமாக எடுத்துச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்துகின்ற சம்பவங்கள் அடிக்கடி தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கப்படுகின்றன.
மாவட்டங்களில் விவசாய உற்பத்தி கணிசமானளவு வீழச்சி கண்டுள்ளது. இம்மாகாணங்களில் பதிவான விளைச்சல் வெறுமனே 30 சதவீதமாகவே காணப்படுகின்றது.
இரசாயன உர இறக்குமதி தடை செய்யப்பட்டதன் விளைவாக விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள தாக்கத்திற்குப் பொறுப்புக்கூறப்போவது யார்? கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து அநேகமான நாடுகள் உணவு உற்பத்தியை ஊக்குவிப்பதில் விசேட கவனம் செலுத்தின.
இருப்பினும் எமது நாட்டின் அரசாங்கம் எவ்வித விஞ்ஞானபூர்வ அடிப்படைகளுமற்ற முறையற்ற தீர்மானத்தை மேற்கொண்டு விவசாயத்துறை முழுமையாக வீழ்ச்சியடைவதற்கான வாய்ப்பை உருவாக்கியது.
அத்தோடு இப்போது டொலருக்கு ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறையின் விளைவாக எரிபொருள் தட்டுப்பாடு உருவாகியிருக்கின்றது. அதனால் நாட்டின் அனைத்துத் துறைகளும் பாரிய நெருக்கடிக்குள்ளாகியுள்ளன என்றார்.
No comments:
Post a Comment