(நா.தனுஜா)
தெற்கில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்கள் கையாளப்படும் விதத்துடன் ஒப்பிடுகையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களை அரசாங்கம் பக்கச்சார்பான முறையில் நடத்துவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்களைக் கட்டுப்படுத்துவதற்கு கேடயங்களை வைத்திருக்கக்கூடிய இராணுவத்தினர், வடக்கில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்துவதற்குத் துப்பாக்கிகளை வைத்திருக்கின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மைய காலங்களில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் பகுதிகளில் ஆயுதமேந்திய இராணுவத்தினர் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்தமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வடக்கில் பொது இடங்களில் இராணுவத்தினரைக் காணமுடிவதென்பது, குறிப்பாக வடக்கில் ஆழமாகக் கால்பதித்துள்ள இராணுவமயமாக்கலை புலப்படுத்துகின்றது. அதேவேளை கொழும்பு வாழ் மக்கள் சுதந்திரமாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்படுகின்றது. அவர்கள் அரச கட்டடங்களுக்குள் நுழைவதற்குக்கூட முற்படுகின்றார்கள்.
ஆனால் வடக்கில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடும் மக்கள் வீதிகளிலேயே தடுத்து நிறுத்தப்படுவதுடன் அதற்கு அப்பால் செல்வதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் யாழ்ப்பாண விஜயத்தையொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் தடுத்து நிறுத்தப்பட்டனர். சம்பவ இடத்தில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட காணொளிகளை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்நோக்கிச் செல்ல முடியாத வகையில் பொலிஸாரால் வீதிகள் மறிக்கப்பட்டனர்.
'பிரதமரைச் சந்திப்பதற்குக் காணாமல்போனோரின் குடும்பத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டமையானது, அரசாங்கம் அக்குடும்பங்களின் கோரிக்கைகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்பதையும் அக்கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்துவதற்கான முனைப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதையும் தெளிவாகப் புலப்படுத்துகின்றது' என்று சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
'தெற்கில் வாழும் மக்கள் அவர்களது உரிமைகளை செயற்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுகின்ற போதிலும், வடக்கு மக்கள் அவர்களது உரிமைகளை செயற்படுத்துவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை.
இது சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்றும் அனைவரும் சமளவான சட்டப் பாதுகாப்பைப் பெறுவதற்கு உரித்துடையவர்கள் என்றும் வரையறுத்துள்ள அரசியலமைப்பின் 12 (1) ஆவது சரத்தை மீறும் வகையிலான செயற்பாடாகும்' என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment