இலங்கை வர்த்தக நிறுவனங்களின் அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மையானது (TRAC) ஓரளவு முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 1, 2022

இலங்கை வர்த்தக நிறுவனங்களின் அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மையானது (TRAC) ஓரளவு முன்னேற்றத்தை வெளிப்படுத்துகிறது

Mohamed Rifdhi Nawas

இன்று (பெப்ரவரி 01) வெளியிடப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான ‘வர்த்தக நிறுவனங்களின் அறிக்கையிடலில் வெளிப்படைத்தன்மை’ (TRAC) மதிப்பாய்வு அறிக்கையின் படி, இலங்கையில் உள்ள நிறுவனங்கள் வர்த்தக அறிக்கையிடலில் மத்திமமான வெளிப்படைத்தன்மை கொண்டவையாகக் கருதப்படுகின்றன. இந்த TRAC அறிக்கையானது ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா (TISL) நிறுவனத்தினால் மதிப்பாய்வு செய்யப்பட்டு தொகுக்கப்பட்டுள்ளது.

TRAC அறிக்கையானது (2021 ஜூன் 1ஆம் திகதியன்று காணப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனத்தின் அடிப்படையில்) கொழும்பு பங்குச் சந்தையில் சிறந்த முதல் 75 வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் பொதுவில் வெளியிடப்பட்டிருந்த தகவல்களின் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிரான திட்டங்கள், நிறுவனத்தின் பங்குகளின் வெளிப்படைத்தன்மை மற்றும் உள்ளக நடவடிக்கைகளின் போது முக்கிய நிதியியல் தகவல்களை வெளிப்படுத்துதல் போன்ற முக்கிய மூன்று தலைப்புகள் ஊடாக ஊழலுக்கெதிராக செயற்படுவதற்கும் அதனை தடுப்பதற்குமான நிறுவனங்களின் அறிக்கையிடல் பற்றிய மதிப்பாய்வினை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக செயற்படுத்தி வருகின்றது.

மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்கள் 10 புள்ளிகளுக்கு 6.93 என்ற சராசரி புள்ளியினை பெற்று வர்த்தக அறிக்கையிடலில் மத்திமமான வெளிப்படைத்தன்மயுடன் செயற்படுகின்றமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பூச்சியம் (0) புள்ளியானது மிகக் குறைந்த வெளிப்படைத்தன்மையினையும் பத்து (10) புள்ளிகள் என்பது முழுமையான வெளிப்படைத்தன்மை கொண்டவையாகவும் கருதப்படுகிறது. இவ்வாண்டின் சராசரியான புள்ளியான 6.93 ஆனது 2020 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட முன்னைய மதிப்பாய்வில் பெறப்பட்ட சராசரி புள்ளியான 6.73 விட சற்று அதிகமாகும். 2020 ஆம் ஆண்டிற்கான TRAC மதிப்பாய்வுக்கு 50 நிறுவனங்கள் உள்வாங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜோன் கீல்ஸ் கூட்டு நிறுவனத்தினர், கொமர்ஷல் வங்கி மற்றும் டயலொக் அக்சியாடா ஆகிய வர்த்தக நிறுவனங்கள் குறித்த மதிப்பாய்வில் கூடிய புள்ளிகளை பெற்ற நிறுவனங்களாகும். ஜோன் கீல்ஸ் கூட்டு நிறுவனத்தினர் குறித்த மதிப்பாய்வு தரவரிசையில் தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாக 1வது இடத்தினை பிடித்ததுடன் தகவல்களை வெளிப்படுத்தும் நடைமுறையில் சிறந்த வெளிப்படத்தைத்தன்மைக்காக ஒட்டுமொத்த முழுப் புள்ளிகளையும் பெற்ற ஒரே நிறுவனமாகும்.

நிறுவனம் தொடர்பாக பொதுவில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் குறித்த நிறுவனங்களுக்கு புள்ளிகள் இடப்பட்டு தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த நிறுவனங்களின் ஆண்டறிக்கை, நிறுவன இணையத்தளங்கள் மற்றும் பொதுவில் கிடைக்கக்கூடிய நிறுவன அறிக்கைகள் என்பன தகவல்களுக்கான மூலகங்களாகும். ஒவ்வொரு நிறுவனத்தினதும் புள்ளிகள் தொடர்பாக அறிந்துகொள்ள https://www.tisrilanka.org/trac2021/ தளத்திற்கு பிரவேசியுங்கள்.

நிறுவனங்களின் ஊழலுக்கு எதிரான கொள்கைகள் அல்லது திட்டங்களை செயற்படுத்தல் தொடர்பில் TRAC அறிக்கை மதிப்பாய்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் குறைந்த புள்ளி என்பது ஒரு நிறுவனத்தில் ஊழலுக்கு எதிராக வலுவான திட்டங்கள் கொண்டிருக்கவில்லை என்பதையோ அல்லது நிறுவன மட்டத்தில் நடைபெறும் தவறுகளை மதிப்பாய்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டதாகவோ கருதப்படுவதில்லை. மேலும் கூடிய புள்ளி என்பது தகவல்களை வெளிப்படுத்தலில் வலுவான கட்டமைப்பினை கொண்டுள்ளதை குறிப்பிடலாம். ஆனால் இது அவர்களது வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் செயற்பாடுகளின் வெற்றியை பிரதிபலிக்கவில்லை.

இலங்கையில் தனியார் துறையானது பொதுவாக ஊழலை ஊக்குவிக்கும் துறையாகவே கருதப்படுகிறது. தனியார் துறையினர் தமது சமூகப் பங்களிப்புகள், ஊழலுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட வியூகங்கள் அல்லது அவர்களின் நிறுவன கட்டமைப்புக்கள் பற்றிய தகவல்களை பொதுவில் வெளியிட வேண்டிய கட்டாயத் தேவை எதுவும் இல்லை என்ற உண்மையால் இந்த கருத்து மேலும் வலுவடைகிறது. நிறுவனம் தொடர்பில் பொதுவில் வெளியிடப்பட வேண்டிய முக்கிய தகவல்களை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் பொதுவில் பகிர்வதை உறுதிப்படுத்தல் என்பது நிறுவனத்தின் பொறுப்புக்கூறல் மற்றும் நிறுவனத்தின் சமூக பொறுப்பின் தன்மையினை நிரூபிக்கும் ஓர் முக்கிய படியாகும், அதனடிப்படையிலேயே TRAC மதிப்பாய்வானது நிறுவனங்களின் வர்த்தக அறிக்கையில் வெளிப்படைத்தன்மையைக் கண்டறிதல், அங்கீகரித்தல், வழிகாட்டல் மற்றும் ஊக்குவித்தல் என்பவற்றை நோக்கமாகக் கொண்டு மதிப்பாய்வு செய்கிறது.

TISL நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான நதிஷானி பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், "இந்த மதிப்பாய்வு அறிக்கையானது நிறுவனங்களுக்கு அவர்களின் தகவல்களை பொதுவில் வெளிப்படுத்தல் நடைமுறைகளை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றி விரிவான பரிந்துரைகளை வழங்குகின்ற அதேவேளை அப்பரிந்துரைகள் குறித்த மதிப்பாய்வில் கூடிய புள்ளிகளை பெறவும் வழிவகுக்கிறது. மேலும் உரிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை திருத்துவதன் முக்கியத்துவம் குறித்து உரிய பரிந்துரைகளை அரசாங்கத்திற்கு குறித்த அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. மேலும் தரவரிசையில் சிறந்த நிலைகளைப் பெற்ற வர்த்தக நிறுவனங்களுக்கும் இம்மதிப்பாய்வில் தமது நிலையினை மேம்படுத்திக்கொண்ட வர்த்தக நிறுவனங்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்கும் வேளையில் இங்கு மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு ஊக்குவிக்கப்பட்டு தகவல்களை வெளிப்படுத்தல் நடைமுறைகளை தமது செயற்பாடுகளில் வெளிப்படுத்துவார்கள் என நாம் நம்புகிறோம்" என அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment