இலங்கையில் கைதாகி விடுவிக்கப்பட்ட 56 தமிழக மீனவர்களில் 43 பேருக்கு கொரோனா - News View

About Us

About Us

Breaking

Tuesday, February 1, 2022

இலங்கையில் கைதாகி விடுவிக்கப்பட்ட 56 தமிழக மீனவர்களில் 43 பேருக்கு கொரோனா

இலங்கையில் சட்டவிரோதமாக கடல் எல்லையை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்டபோது கைதாகி பின்னர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 56 மீனவர்களில் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட்டவர்களில் 4 மீனவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், எஞ்சிய 9 மீனவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி ராமேஸ்வரம் மீன் பிடித்துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 6 விசைப் படகுகளையும் அதிலிருந்த 43 மீனவர்களையும், அதேபோல் 20ஆம் திகதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு படகுகளையும் அதிலிருந்த 13 மீனவர்கள் என மொத்தம் 56 தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாகக் கூறி நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய விசைப் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிறகு அவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் மீதான வழக்கு கடந்த ஒரு மாதமாக ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கடந்த 25ஆம் திகதி மீன்வளத்துறை அதிகாரிகள் தமிழக மீனவர்கள் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கஜநிதிபாலன், தமிழக மீனவர்கள் 55 பேரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

இதில் டிசம்பர் மாதம் 20ஆம் திகதி இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட ஜெகதாபட்டிணம் மீனவர்களில் ஒருவர் சிறுவன் என்பதால் அவன் மீது வழக்கு விசாரணை ஏதுமின்றி சிறுவர் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

அந்த சிறார் உட்பட 56 பேரும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட 56 மீனவர்களையும் உடனடியாக தாயகம் அனுப்ப தூதரக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதன் ஒரு பகுதியாக மீனவர்களை விமானம் மூலம் தாயகம் அனுப்பி வைக்கும் முன்பு அனைவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில், 43 மீனவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 4 மீனவர்களுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யுமாறும் எஞ்சியுள்ள 9 மீனவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் முடிவுகள் வந்துள்ளன.

இதையடுத்து தொற்று உறுதி செய்யப்படாத 9 மீனவர்களை கொழும்பில் உள்ள மெருஹானா முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

மேலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 43 மீனவர்கள் கிளிநொச்சி மாவட்டம் இயக்கச்சி கொரோனா சிகிச்சை முகாமில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மறு பரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்பட்ட 4 மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் மாதிரிகளை இன்று இலங்கை சுகாதாரத் துறையினர் சேகரித்துச் சென்றுள்ளனர்.

கொரோனா பரிசோதனை முடிவின் அடிப்படையில் மீனவர்களுக்கு முழுமையாக உடல் பரிசோதனை செய்து கொரோனா தொற்று இல்லை என உறுதியானால், அவர்களும் கொழும்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பிறகு மீனவர்கள் ஒரே குழுவாக தமிழ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment