(ஆர்.யசி.எம்.ஆர்.எம்.வசீம்)
பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழு இதுவரை நியமிக்கப்படாமல் இருப்பது தொடர்பாக ஆளும் கட்சி பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எதிர்க்கட்சி பிரமத கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல ஆகியோருக்கிடையில் வாக்குவாதம் இடம்பெற்றது.
பாராளுமன்றம் நேற்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் கூடியது.
பிரதான நடவடிக்கைகள் இடம்பெற்ற பின்னர் ஒழுங்கு பிரச்சினை ஒன்றை எழுப்பிய எதிர்க்கட்சி பிரமத கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிடுகையில், பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக்குழு 2 வருடமாக நியமிக்கப்படாமல் இருக்கின்றது. இது தொடர்பாக ஒவ்வொரு மாதமும் நான் இந்த சபையில் நினைவுபடுத்தி வருகின்றேன். ஆனால் சபாநாயகராகிய நீங்கள் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். எமது உரிமைகளை பாதுகாக்க வேண்டும். கடந்த கட்சித் தலைவர் கூட்டத்தின்போது துறைசார் மேற்பார்வைக் குழுவின் முக்கியத்துவம் தொடர்பாக எடுதுக்கூறினேன். ஏனெனில் சட்ட மூலம் ஒன்று வந்தால் ஆலாேசனை குழுவில் அதன் சரத்துக்கள் தொடர்பில் கலந்துரையாடப்படுவதில்லை. ஆனால் துறைசார் மேற்பார்வைக் குழுவில் சட்ட மூலத்தின் ஒவ்வொரு சரத்து தொடர்பாகவும் ஆராயப்படுகின்றது என்றார்.
இதற்கு பதிலளித்த ஆளும் கட்சி பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவிக்கையில், நிலையியற் கட்டளைகளை தற்காலிகமாக இடை நிறுத்தி இருக்கின்றோம்.
அரசாங்கம் என்ற வகையில் அது தொடர்பில் எதிர்வரும் காலங்களில் தீர்மானம் எடுப்போம். இது எமது அரசாங்கம் நாங்கள்தான் நிலையியற் கட்டளைகளை இடைநிறுத்த தீர்மானித்தோம். எமது கொள்கையை மாற்றுவதற்கு எமக்கு முடியும்.
எந்தவொரு அரசாங்கமும் அதிகாரத்துக்கு வந்தால், அந்த அரசாங்கம் தனக்கு தேவையான கொள்கையையே பின்பற்றுகின்றது. அதனால் தற்போது இருப்பது எமது அரசாங்கம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எமக்கு தேவையான முறையில் கொள்கையை மாற்ற முடியும். அதன் பிரகாரமே நிலையியற் கட்டளைகளை தற்காலிகமாக இடை நிறுத்த தீர்மானித்திருக்கின்றோம். என்றார்.
இதற்கு சபாநாயகர் பதிலளிக்கையில், இது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடி தீர்மானம் மேற்கொள்வோம் என்றார்.
No comments:
Post a Comment