(எம்.மனோசித்ரா)
உலகில் சில நாடுகள் இன்னும் தடுப்பூசி வழங்கும் பணிகளை ஆரம்பிக்காத நிலையிலும் கூட, இலங்கையில் 95 சதவீதமானோருக்கு, குறிப்பாக சிறுவர்களில் 98 சதவீதமானோருக்கு தடுப்பூசியை வழங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
கொவிட் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளில் ஏனைய நாடுகளில் மக்கள் தமது தடுப்பூசியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில், இலங்கையில் சுகாதார தரப்பினர் மக்கள் பின்னால் சென்று தடுப்பூசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
இலங்கையில் கொவிட் கட்டுப்படுத்தலில் மூன்று கட்ட தடுப்பூசிகளையும் துரிதமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை பிரதான காரணியாகும்.
முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் காண்பித்த ஆர்வம், மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் பல்வேறு காரணிகளால் குறைவடைந்துள்ளது.
கொவிட் தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை குறைவடைந்தமையால் மூன்றாம் கட்ட தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதில் மக்கள் பொறுப்பின்றி செயற்படுகின்றனர். எனினும் தற்போது மீண்டும் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால், மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.
எவ்வாறிருப்பினும் எதிர்வரும் ஓரிரு மாதங்களுக்குள் திட்டமிடப்பட்டுள்ள சனத் தொகைக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகள் நிறைவு செய்யப்படும். சில நாடுகள் இன்னும் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பிக்காத நிலையிலும் கூட, இலங்கையில் 95 சதவீதமானோருக்கு, குறிப்பாக சிறுவர்களில் 98 சதவீதமானோருக்கு தடுப்பூசியை வழங்கியுள்ளது.
மக்கள் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வதை இலகுபடுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பல தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதோடு, நடமாடும் தடுப்பூசி சேவைகளும் முன்னெடுக்கப்படுகின்றன.
கொவிட் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக பல சர்வதேச அமைப்புக்கள் இலங்கைக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியுள்ளன. சர்வதேச செஞ்சிலுவை சங்கமும் அவ்வாறு இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் செயலாளர், சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையில் நீண்ட வரலாற்று தொடர்புகள் காணப்படுகின்றன. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற போதும், சுனாமி பேரழிவின் போதும் அதற்கமைய உதவிகள் வழங்கப்பட்டன. இதே போன்று கொவிட் கட்டுப்படுத்தலுக்கும் தொடர் உதவிகள் வழங்கப்படும்' என்று குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment