அப்பாவி மக்களின் உயிரை பலியெடுத்துத்தான் தொழிற்சங்க உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அதனை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் - ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

About Us

Breaking

Friday, February 11, 2022

அப்பாவி மக்களின் உயிரை பலியெடுத்துத்தான் தொழிற்சங்க உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டுமென்றால் அதனை தடுக்க சட்டம் இயற்ற வேண்டும் - ரோஹித அபேகுணவர்தன

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம்)

தொழிற்சங்கங்கள் தமது உரிமைகளை கேட்டு போராடுவதில் எந்த தவறும் இல்லை, ஆனால் அப்பாவி மக்களின் உயிருடன் விளையாடி, அவர்களின் உயிரை பலியெடுத்துத்தான் தொழிற்சங்க உரிமைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அதனை தடுக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை 10 ஆம் திகதி இடம்பெற்ற குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், ஆளணியினருக்கெதிரான கண்ணிவெடிகளைத் தடைசெய்தல் சட்டமூலம், குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம், மாகாணசபைகளை (முத்திரைத் தீர்வை கைமாற்றுதல்) திருத்த சட்டமூலம் ஆகியவற்றின் மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த மூன்று நாட்களாக சுகாதாரத் துறையினரினால் வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது, இந்த போராட்டத்தினால் அப்பாவி பொதுமக்களே பாதிக்கப்பட்டுள்ளனர்.

உணவு உண்ணாது நீண்ட தூர பிரதேசங்களில் இருந்து வைத்தியசாலைகளுக்கு வந்தால் இங்கு மருந்துகளை எடுக்க முடியாதுள்ளது. சம்பள உயர்வு எனக் கூறிக்கொண்டு பொதுமக்களை பலியெடுக்கும் வேலையினை செய்கின்றனர்.

சுகாதாரத்துறை என்பது அத்தியாவசிய சேவையாகும். வைத்திய தொழிற்சங்கங்கள் அதனை தவறாக பயன்படுத்த முடியாது. தொழிற்சங்க போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றால் அதற்கென்ற முறையொன்று உள்ளது. பொதுமக்களை கொன்றுகுவித்து இதனை முன்னெடுக்க வேண்டுமா?

அப்பாவி மக்களுக்கு தனியார் வைத்தியசாலைகளுக்கு சென்று மருந்து பெற்றுக் கொள்ள முடியாது. அவர்களுக்கு அரச வைத்திய சாலைகளே பாதுகாப்பு. இதனை பயன்படுத்தி அரச எதிர்ப்பு அலையொன்றை உருவாக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர்.

வடக்கு கிழக்கு தெற்கில் அப்பாவி மக்களே இதனால் பாதிக்கப்படுகின்றனர். ஆகவே இந்த செயற்பாடுகளை நாசமாக்கும் நடவடிக்கைகளை தடுக்க நீதி அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான தவறான செயற்பாடுகளை இப்போதாவது நிறுத்தியாக வேண்டும்.

நாம் எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் இதே தவறுகளை செய்திருக்கலாம், ஆனால் இப்போது நாம் அதனை திருத்திக் கொள்ள வேண்டும். அதுவே அரசியல் அனுபவமாகும். எனவே இப்போது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டங்களை தடுத்து மக்களை பாதுகாக்க சட்ட முறைப்படி தீர்மானம் எடுப்பதே சரியானதாகும் என்றார்.

No comments:

Post a Comment