முழு இலங்கைக்கும் மகத்தான சேவையாற்றிய மங்கள சமரவீர அரசியல் சாணக்கியமும், மக்களின் மனதை வாசிக்கும் திறனும் கொண்ட ஒரு தலைவர் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ - News View

About Us

Add+Banner

Breaking

  

Friday, February 11, 2022

demo-image

முழு இலங்கைக்கும் மகத்தான சேவையாற்றிய மங்கள சமரவீர அரசியல் சாணக்கியமும், மக்களின் மனதை வாசிக்கும் திறனும் கொண்ட ஒரு தலைவர் - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

.com/img/a/
மாத்தறை மாவட்டத்திலிருந்து அரசியல் களத்தில் இறங்கி 1994 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்று தபால் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் பதவியை வகித்த இளம் அமைச்சரான மங்கள சமரவீரவின் மறைவிற்கு எமது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இவரது தந்தை மஹாநாம சமரவீர, 1952 இல் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகவும், 1956 இல் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - மக்கள் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் மாத்தறை மாவட்ட எம்.பியாக இருந்தார். மறைந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க தலைமையில் அமைச்சராகப் பணியாற்றினார். திருமதி பேமா பத்மாவதி சமரவீர அவரது அன்புக்குரிய தாயார் மாத்தறை மாநகர சபையின் உறுப்பினராகவும் இருந்தார்.

மங்கள சமரவீர 1956 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி பிறந்தார். கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற மங்கள சமரவீர, லண்டனில் உள்ள சென். மார்ட்டின் கலைப் பாடசாலையில் ஆடை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றதோடு, களனிப் பல்கலைக்கழக அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் வெளிவாரி விரிவுரையாளராகவும் பணியாற்றினார். ஆடைத் தொழில் அமைச்சின் ஆலோசகப் பதவியையும் வகித்தார்.

1980 களின் பிற்பகுதியில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் இராணுவமயமாக்கல் மற்றும் இனவாதத்திற்கு எதிராக செயற்பட்ட ஒரு அமைப்பான அன்னையர் முன்னணினை அமைத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் அமைப்பாளராக செயற்பட்டார். வெண் தாமரை இயக்கத்தின் இணை அழைப்பாளராகவும் இருந்தார்.

வரலாற்றில் இருண்ட காலப்பகுதியில் தீயினால் அழிக்கப்பட்ட யாழ். பொது நூலகத்தை புனரமைப்பதற்காக 1997 ஆம் ஆண்டு புத்தகமும் செங்கலும் என்ற திட்டத்திற்கு அவர் லக்ஷ்மன் கதிர்காமரும் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கினார்.

1994 இல் பொதுஜன முன்னணி அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் அவர் முன்னோடியாக இருந்தார். அவர் 1994 முதல் 2019 வரை பல்வேறு துறைகளில் அமைச்சராக இந்த சபையைப் பிரதிநிதித்துவப்படுத்திய மூத்த அரசியல்வாதியாவார்.

1994 இல், துறைமுகங்கள் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சராகவும், நகர அபிவிருத்தி ,நிர்மாணத்துறை மற்றும் பொதுப் பயன்பாடுகள் அமைச்சராகவும் அவர் முக்கியப் பங்காற்றினார்.

நஷ்டத்தில் இயங்கும் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தை மறுசீரமைக்கும் சவாலை அவர் ஏற்றுக் கொண்டார். வெகுஜன ஊடகங்கள் மற்றும் தகவல் மறுசீரமைப்பு அமைச்சராக ரிச்சர்ட் டி சொய்சா வீடமைப்பு திட்டம் அமைத்து ஊடகவியலாளர்களுக்கு வழங்க பங்களித்தார்.

2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராகவும் துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சராகவும் இருந்தார். அவர் 2015-2019 வரை அரசாங்கத்தின் வெளியுறவு அமைச்சராகவும் பின்னர் நிதி அமைச்சராகவும் பணியாற்றினார்.

மங்கள சமரவீரவை அரசியல் சாணக்கியமும், மக்களின் மனதை வாசிக்கும் திறனும் இருந்த ஒரு அரசியல் தலைவர் என வர்ணிக்க முடியும். அவர் இலங்கை அரசியலில் மிகவும் ஆக்கப்பூர்வமான மற்றும் அரசுகளை உருவாக்கியவர்களில் முக்கிய ஒருவர்.

அவர் தனது கொள்கைகளை மாற்றிக் கொள்ளாத அரசியல்வாதி. சமூகத்தில் உள்ள அனைத்து வகுப்புகள், மதங்கள், வயது மற்றும் அனைத்து அரசியல் குழுக்களுடனும் சமமான உறவைப் பேணிய தலைவராகவும் இருந்தார்.

இலங்கை அரசியலில் அவர் வகித்த அமைச்சுப் பதவிகள் மற்றும் அவர்களின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புகளின் அடிப்படையில், அது ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிக்கு அடுத்தபடியாக இருந்தது. எந்த அரசியல் சார்பும் இல்லாமல் அனைவரிடமும் நெருங்கிய நண்பராக இருந்தார்.

குறிப்பாக 2005 ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் பிரச்சார முகாமையாளராக அவர் முக்கிய பங்கு வகித்தார்.

கொரோனா வைரஸ் நம் மக்களைப் பாதிக்கும்போது, ​​​​நமது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்க முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று அவர் அமெரிக்கத் தலைவர்களிடம் தனிப்பட்ட முறையில் கேட்டுக் கொண்டார்.

30 ஆண்டுகளுக்கும் மேலான பாராளுமன்ற அரசியலில் இருந்து 2019 இல் ஓரளவு ஓரமான அவர் சிவில் உரிமைகளைப் பாதுகாக்கும் சமூக ஊடக வலையமைப்புகளில் தீவிரமாக ஈடுபட்டார்.

எந்த அரசியல் முகாமுக்கும் அவரைப் போன்ற அரசியல்வாதியே பலம்.

மங்கள சமரவீர தமது அரசியல் வாழ்வின் ஊடாக மக்களுக்கு ஆற்றிய அளப்பரிய சேவையை அரசியல் ரீதியாக பாராட்டுவது மக்கள் பிரதிநிதிகளாகிய எமது பொறுப்பாகும்.

முப்பது வருடங்கள் (30), மூன்று மாதங்கள் (03) மற்றும் 18 நாட்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து இலங்கை மக்களுக்கு சேவையாற்றிய கௌரவ மங்கள சமரவீர அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் எமது கௌரவத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முழு இலங்கை மக்களுக்கும் மகத்தான சேவையாற்றியவர் அவர். அவரது சகோதரி உட்பட அவரது உறவினர்களுக்கு இந்த சபையின் அனுதாபத்தைத் தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *