ரோஹித எம்.பியின் மருமகனுக்கு விளக்கமறியல் : ஜகத் விதான எம்.பியின் மகனுக்கு பிணை - News View

About Us

About Us

Breaking

Thursday, July 24, 2025

ரோஹித எம்.பியின் மருமகனுக்கு விளக்கமறியல் : ஜகத் விதான எம்.பியின் மகனுக்கு பிணை

சர்ச்சைக்குரிய ஜீப் தொடர்பாக சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடிக்கு எதிர்வரம் ஓகஸ்ட் மாதம் 01ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஒன்றிணைக்கப்பட்டு, போலி ஆவணங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய ஜீப் தொடர்பாக இடம்பெற்று வரும் வழக்கு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி இன்று (24) மத்துகம நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.

போலி விடயங்களை வழங்கி பதிவு செய்யப்பட்ட ஜீப் தொடர்பாக பதில் பொலிஸ்மா அதிபருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், வலானா மத்திய ஊழல் தடுப்புப் பிரிவு சுமார் 4 மாதங்களுக்கு முன்னர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தது.

குறித்த ஜீப் வாகனம் மத்துகம நகரில் ஓட்டிச் செல்லப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட வலானனை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர், சம்பந்தப்பட்ட ஜீப்பையும் வாகனத்தையும் அதனை செலுத்திச் சென்ற சந்தேகநபரையும் கடந்த ஜூலை மாதம் 19 ஆம் திகதி சனிக்கிழமை கைது செய்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதான என்பவதே இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஆவார். சந்தேகநபர் கடந்த ஞாயிற்றுகிழமை மத்துகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவருக்கு ஓகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டது.

அதற்கமைய குறித்த ஜீப் வாகனம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில், அது சட்டவிரோதமாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு, தவறான தகவல்களைச் சமர்ப்பித்து மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சட்டவிரோத செயற்பாட்டுடன் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தைச் சேர்ந்த ஒருவர் ஈடுபட்டிருக்கலாம் என்று பொலிசார் சந்தேகிக்கின்றனர்.

ஜகத் விதானவுக்குச் சொந்தமான ஒரு தனியார் நிறுவனத்தின் பெயரில் இரண்டாவது முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஜீப் வாகனத்தை, அவரது மகன் பயன்படுத்தியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொசெல் மெலனி அபேகுணவர்தனவிடமிருந்து குறித்த ஜீப்பை வாங்கியதாக கைது செய்யப்பட்ட ரசிக விதான வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதற்கமைய, களுத்துறை, நாகொடவில் உள்ள ரொசெல் மெலனி அபேகுணவர்தனவின் வீட்டிற்கு விசாரணைக்காக சென்ற போதிலும், அவரும் அவரது கணவரும் அங்கிருந்த தலைமைறைவாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான பின்னணியில், பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தனுஷ்க வீரக்கொடி இன்று மத்துகம நீதிமன்றில் சரணடைந்திருந்தார்.

குறித்த நபர் யால தேசிய பூங்காவில் வினோத ஜீப் பேரணியொன்றை ஏற்பாடு செய்திருந்த சர்ச்சைக்குரிய சம்பவம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலையில் அபாயகரமான வகையில் ஜீப் வண்டியை செலுத்திய சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, குறித்த சர்ச்சைக்குரிய ஜீப் ரக வாகனத்தை மேற்படி நபரிடமிருந்து கொள்வனவு செய்திருந்த, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானவின் மகன் ரசிக விதான பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரை தலா ரூ. 10 இலட்சம் கொண்ட 2 சரீர பிணைகளில் விடுவிக்க, மத்துகம நீதவான் உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment