காட்டு யானைகளின் உயிர்களைக் காப்பாற்றுவதுடன், கிராமிய மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதுகாப்பது தொடர்பிலும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடையில் இன்று (24) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.
நாளுக்குநாள் அதிகரித்து வரும் காட்டு யானைகளுக்கு இடம்பெறும் தொல்லைகள் மற்றும் கிராமிய மக்களின் அன்றாட வாழ்வில் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் தற்போதைய நிலைமை குறித்தும் ஜனாதிபதி கேள்வி எழுப்பினார்.
இது தொடர்பான தற்போதைய நிலைமை மற்றும் அதற்கான தீர்வுகளைக் காண்பதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நீண்ட காலமாக எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் குறித்து இதன்போது அதிகாரிகள் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, காட்டு யானைகளுக்கு இடம்பெறும் தொல்லைகளை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அதற்காக குறுகிய கால, மத்திய கால மற்றும் நீண்ட காலத் தீர்வைக் காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
கிராமிய மட்டத்தில் இது தொடர்பில் உன்னிப்பாக ஆராயுமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, அரசியல் அதிகாரம் மற்றும் மக்களின் பங்களிப்புடன் இப்பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
அதற்காக, தற்போதைய மனி தவளப் பற்றாக்குறையைப் போக்க, சிவில் பாதுகாப்புப் படையின் 5,000 உறுப்பினர்களை உதவியாளர்களாக விரைவாக இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
அதேபோன்று, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு அவர்களின் கடமைகளுக்கு பற்றாக்குறையாக உள்ள வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும் பணிப்புரை விடுத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இதற்காக கெப் வகை வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை கொள்வனவு செய்வதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் தெரிவித்தார்.
மேலும், காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்க பரிந்துரைக்கப்பட்ட 800 கி.மீ மின்சார பாதுகாப்பு வேலி மற்றும் 16 யானை வழித்தடங்களை மீளமைப்பதற்குத் தேவையான திட்டங்களை அவசரமாகத் தயாரித்து சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
வனஜீவராசிகள் திணைக்களத்தின் தொடர்பாடல் குறைபாடுகளை நிவர்த்தி செய்து மக்களுடன் நெருக்கமாக இருந்து அவர்களின் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கவும், தகவல்களைப் பெறுவதற்கான முறையான பொறிமுறையொன்றை உருவாக்குமாறும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இங்கு பணிப்புரை விடுத்தார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி, சுற்றாடல் பிரதி அமைச்சர் என்டன் ஜயகொடி, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் கே.ஆர். உடுவாவெல, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, சிவில் பாதுகாப்பு திணைக்கள பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ, வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எஸ்.எல்.ஆர்.பி. மாரசிங்க, பிரதிப் பணிப்பாளர் (யானைகள் பாதுகாப்பு) வீ.எல். தௌபீன், சுற்றாடல் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிம்ஷானி ஜாசிங்ஆரச்சி, வனப் பாதுகாவலர் நாயகம் எஸ்.சீ. பாலமகும்புர, பாதுகாப்புப் பிரிவுகளின் அதிகாரிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment