ஹமாஸின் பதிலை பரிசீலிக்கும் இஸ்ரேல் : அழுத்தங்கள் அதிகரிப்பு : பட்டினியால் உயிரிழந்த பலஸ்தீனர்கள் 115 ஆக உயர்வு - News View

About Us

About Us

Breaking

Thursday, July 24, 2025

ஹமாஸின் பதிலை பரிசீலிக்கும் இஸ்ரேல் : அழுத்தங்கள் அதிகரிப்பு : பட்டினியால் உயிரிழந்த பலஸ்தீனர்கள் 115 ஆக உயர்வு

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் மற்றும் பட்டினியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் போர் நிறுத்தம் தொடர்பில் ஹமாஸ் அமைப்பு அளித்த பதிலை இஸ்ரேல் பரிசீலித்து வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் நேற்று (24) தெரிவித்தது.

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவது மற்றும் அங்குள்ள பணயக் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் புதிய முன்மொழிவு ஒன்றை கையளித்ததை ஹமாஸ் உறுதி செய்துள்ளது. 

ஹமாஸ் அமைப்பு முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை அளித்த பதிலை இஸ்ரேலிடம் கையளிப்பதற்கு முன்னரே போதுமானதாக இல்லை எனக் குறிப்பிட்டு மத்தியஸ்தர்கள் நிராகரித்திருந்ததாக இது தொடர்பில் தெரிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

காசாவில் இஸ்ரேல் உதவிகளை முற்றாக முடக்கி இருக்கும் சூழலில் அங்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அண்மைய நாட்களில் வேகமாக அதிகரித்திருப்பது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான அழுத்தமும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் அளித்திருக்கும் புதிய பதில் செயற்படுத்தக் கூடியதாக உள்ளது என்று இஸ்ரேல் மூத்த அதிகாரி ஒருவர் உள்ளூர் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் எந்த ஒரு போர் நிறுத்தத்தின்போதும் இஸ்ரேலியப் படைகள் காசாவில் இருந்து வாபஸ் பெறுவது உட்பட இரு தரப்புக்கும் இடையே பல விடயங்களில் முரண்பாடுகள் நீடிக்கும் நிலையில் விரைவான உடன்படிக்கை ஒன்றை எட்டுவது சாத்தியமில்லை என்று இஸ்ரேலின் ‘செனல் 12’ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையுடன் தொடர்புபட்ட ஹமாஸ் அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டிருப்பதாவது, ‘ஹமாஸின் புதிய நிலைப்பாடு நெகழ்வுப் போக்குடையது மற்றும் சாதகமானது என்பதோடு காசாவில் அதிகரிக்கும் வேதனை மற்றும் பட்டினியை நிறுத்த வேண்டிய தேவையை கருத்தில் கொண்டுள்ளது’ என்றார்.

கடந்த சில வாரங்களில் காசாவில் பல டஜன் பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் சரமாரி தாக்குதல்களுக்கு மத்தியிலேயே அங்கு பட்டினி மரணங்களும் அதிகரித்து வருகின்றன. பட்டினி மற்றும் மோசமான ஊட்டச்சாத்து குறைபாட்டினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது என்று காசா அரச ஊடக அலுவலகம் நேற்று குறிப்பிட்டது.

இந்த ஆண்டில் இதுவரை ஊட்டச்சத்து குறைபாட்டால் ஐந்து வயதுக்கு குறைவான 21 சிறுவர்கள் உயிரிழந்திருப்பதாக உலக சுகாதார அமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதவிகள் தொடர்ந்து முடக்கப்பட்டு ஒட்டுமொத்த குடும்பங்களும் உணவுகள் இன்றி பல நாட்களை கழித்து வரும் நிலையில் எதிர்வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையக் கூடும் என்று அந்த அலுவலகம் எச்சரித்துள்ளது.

கடந்த மார்ச் மாத ஆரம்பம் தொடக்கம் காசாவுக்கான அனைத்து விநியோகங்களையும் இஸ்ரேல் முடக்கியதோடு கடும் கட்டுப்பாடுகளுடன் கடந்த மே மாதத்தில் உதவி விநியோகத்தை ஆரம்பித்தபோதும் அந்த உதவிகள் பொதுமக்களுக்கு செல்வது கடினமாக உள்ளது. குறிப்பாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் உதவி விநியோக மையங்களில் இஸ்ரேலியப் படை தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் 1000இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காசாவில் உள்ள 2.2 மில்லியன் மக்களுக்கு போதுமான உதவிகளை விடுவித்ததாக இஸ்ரேல் கூறியபோதும் இஸ்ரேலின் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அதனை செயல்திறனுடன் விநியோகிப்பது சாத்தியமில்லாது இருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களும் தொடர்ந்து நீடித்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் இவ்வாறான தாக்குதல்களில் குறைந்தது 79 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 453 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டவர்களில் உதவி பெறச் சென்ற 23 பேரும் அடங்குவதாக அது கூறியது.

இந்தக் காலப் பகுதியில் முந்தைய தாக்குதல்களில் கொல்லப்பட்ட நிலையில் இடிபாடுகளில் இருந்து 10 சடலங்களை மீட்டதாகவும் அந்த அமைச்சு குறிப்பிட்டது.

இதன்படி கடந்த 21 மாதங்களாக காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 59,587 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 143,498 பேர் காயமடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment