“4 நாட்களாக சாப்பிடாததால் எனது 2 குழந்தைகளும் அழுதுகொண்டிருந்தனர்,” என்கிறார் காஸாவை சேர்ந்த ஒருவர்.
“வீட்டுக்கு ஒரு பை மாவு கொண்டுவந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் நான் விநியோக இடத்தை அடைந்தேன். ஆனால் அங்கு சென்றபோது என்ன செய்வது என எனக்கு தெரியவில்லை,” என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் அமெரிக்க மற்றும் இஸ்ரேல் ஆதரவு பெற்ற சர்ச்சைக்குரிய காஸா மனிதநேய அறக்கட்டளை (GHF) விநியோகிக்கும் உதவியை மட்டுமே நம்பியுள்ள நிலையில், ஊட்டச்சத்து குறைபாடு, பட்டினி, உதவி மையங்கள் அருகே கொலைகள் எல்லாம் காஸாவில் கவலையளிக்கும் பிரச்சினைகளாகி வருகின்றன.
“காஸா மனிதநேய அறக்கட்டளை (GHF) மே 27ஆம் திகதி செயல்படத் தொடங்கியதிலிருந்து, காஸாவில் உணவு பெற முயன்றபோது 1,000 இற்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்,” என்கிறார் ஐ.நா மனித உரிமைகள் அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் தமீன் அல்-கீதான்.
“ஜூலை 21ஆம் திகதி வரை காஸாவில் உணவை பெற முயன்றபோது 1,054 பேர் கொல்லப்பட்டதாக நாங்கள் பதிவு செய்திருக்கிறோம், இதில் 766 பேர் காஸா மனிதநேய அறக்கட்டளை அமைந்துள்ள இடங்களுக்கு அருகிலும், 288 பேர் ஐ.நா மற்றும் பிற மனிதநேய அமைப்புகளின் உதவி வாகனங்களுக்கு அருகிலும் கொல்லப்பட்டுள்ளனர்,” என அவர் தெரிவித்தார்.
மே மாத இறுதியில் தெற்கு மற்றும் மத்திய காஸாவில் பல உதவி மையங்களில் குறைவான அளவு உதவிகளை வழங்கி காஸா மனிதநேய அறக்கட்டளை தனது செயல்பாடுகளை தொடங்கியது. அதற்கு முன்பு 11 வாரங்கள் இஸ்ரேல் காஸாவை முடக்கி எந்த உணவையும் அந்தப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை.
ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் பட்டினியால் அந்தப் பகுதியில் 21 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக காஸா நகரில் செயல்படும் ஷிபா வைத்தியசாலை பணிப்பாளர் முகம்மது அபு சல்மியா தெரிவித்துள்ளார்.
காஸாவில் சுமார் 900,000 குழந்தைகள் பட்டினியால் வாடுவதாகவும், அவர்களில் 70,000 பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கவலையளிக்கும் எண்ணிக்கையில் இறப்புகளை சந்திப்பதாகவும், குறிப்பாக நீரிழிவு மற்றும் சிறுநீரக நோயாளிகள் அபாயத்தில் இருப்பதாக வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.
பட்டினியை எதிர்கொள்ளும் நிலை
உலக உணவு திட்டத்தின்(WFP) கூற்றுப்படி காஸாவின் மொத்த மக்கள் தொகையுமே பட்டினியை எதிர்கொண்டிருக்கிறது.
“ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது, 90,000 பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உடனடி சிகிச்சை தேவைப்படுகிறது. மூன்றில் ஒருவர் பல நாட்களுக்கு உண்ணாமல் இருக்கின்றனர்,” என ஞாயிறன்று வெளியிட்ட அறிக்கையில் உலக உணவு திட்டம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு பெற்ற காஸா மனிதநேய அறக்கட்டளை மே மாதம் இறுதியில் உதவிகளை விநியோகிக்க தொடங்கியது முதலே உதவியை தேடிவரும்போது பாலத்தீனர்கள் கொல்லப்படுவது பற்றிய செய்திகள் கிட்டத்தட்ட தினமும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment