சுதந்திரக் கட்சியை ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றினைக்கும் ஒப்பந்தத்தை மைத்திரி செயற்படுத்துகிறார் - ரோஹித அபேகுணவர்தன - News View

About Us

About Us

Breaking

Sunday, January 9, 2022

சுதந்திரக் கட்சியை ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றினைக்கும் ஒப்பந்தத்தை மைத்திரி செயற்படுத்துகிறார் - ரோஹித அபேகுணவர்தன

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றினைக்கும் ஒப்பந்தத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது செயற்படுத்துகிறார். இவரிடமிருந்து சுதந்திர கட்சியை கடவுள்தான் பாதுகாக்க வேண்டும் என துறைமுகம் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (9) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டப்ள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க உயிருடன் இருந்திருந்தால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளுக்கு தகுந்த பாடம் புகட்டியிருப்பார். எமது அரசியல் பயணம் சுதந்திர கட்சியில் இருந்தே ஆரம்பமானது.

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு அப்பம் சாப்பிட்டு அரசியலில் ஏற்படுத்திய மாற்றத்தினால் சுதந்திர கட்சியில் இருந்து வெளியேறி மாற்று அரசியல் கட்சியினை உருவாக்கினோம்.

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன கட்சியின் கொள்கைகளை பொருட்படுத்தாமல் 2015ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியுடன் தேசிய அரசாங்கத்தை ஸ்தாபித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் கொள்கைக்கு எதிராகவே சுதந்திர கட்சி ஸ்தாபிக்கப்பட்டது. கொள்கைக்கு முரணான இரண்டு அரசியல் கட்சிகளும் ஒன்றினைந்ததன் விளைவை முழு நாடும் எதிர்கொண்டது.

புராதான அரசியல் கட்சியான சுதந்திர கட்சியை ஐக்கிய தேசிய கட்சியுடன் ஒன்றினைத்து கட்சியை முழுமையாக மைத்திரிபால சிறிசேனவே இல்லாதொழித்தார்.

2019ஆம் ஆண்டு பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி அரசாங்கத்தில் ஒன்றினைந்ததன் காரணமாகவே மக்கள் பொதுத் தேர்தலில் சுதந்திர கட்சிக்கு குறைந்தப்பட்ச ஆதரவை வழங்கினார்கள்.

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன சுதந்திர கட்சியை ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஒன்றினைக்கும் ஒப்பந்தத்தை தற்போது செயற்படுத்துகிறார்.

அரசாங்கத்தில் இருந்துகொண்டு அரசாங்கத்தை விமர்சித்துக் கொண்டிருக்கிறார். இவரிடமிருந்து சுதந்திர கட்சியை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment