அரசை விட்டு சுதந்திரக் கட்சி வெளியேறுமென எவரும் பகற்கனவு காண வேண்டாம் : தமிழ், முஸ்லிம் மக்களது பிரச்சினைகள் பலவும் தீர்க்கப்பட்டு வருகின்றன - சுரேன் ராகவன், சுலைமா லெப்பை அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, January 16, 2022

அரசை விட்டு சுதந்திரக் கட்சி வெளியேறுமென எவரும் பகற்கனவு காண வேண்டாம் : தமிழ், முஸ்லிம் மக்களது பிரச்சினைகள் பலவும் தீர்க்கப்பட்டு வருகின்றன - சுரேன் ராகவன், சுலைமா லெப்பை அறிவிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எக்காரணம் கொண்டும் அரசாங்கத்திலிருந்து விலகிக் கொள்ளாது. கூட்டுக் கட்சிகள் இடையே சிறுசிறு மனக்கசப்புகள், சச்சரவுகள் இடம்பெற்றாலும் அரசிலிருந்து வெளியேறும் எந்த ஒரு எண்ணமும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இல்லை. அவ்வாறு எதிர்பார்ப்போரின் கனவு ஒருபோதும் நிறைவேறாதென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளரும் நிந்தவூர் பிரதேச சபையின் பிரதி தவிசாளருமான சுலைமா லெப்பை ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இரு பிரதான கட்சிகளுக்குமிடையே நிலவி வரும் சிறு பிணக்குகளை வைத்து அரசிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வெளியேறப் போகிறதென சிலர் எதிர்பார்க்கிறார்கள். அவர்களது கனவு ஒருபோதும் நிறைவேறாது. ஏனெனில் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை சரியாக விளங்கி அவற்றை முன்னெடுத்துச் சென்று மக்களை சீரான வாழ்க்கைக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்பதில் இரண்டு கட்சிகளின் தலைவர்களுமே உறுதியாக இருக்கிறார்கள்.

நாடு கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக விடுபடாத ஒரு நிலையில் அரசாங்கம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு அதன் பங்காளிக் கட்சி எனும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனது பூரண பங்களிப்பை முழுமையாக வழங்கி வருகிறது. கட்சி அரசியலுக்கு அப்பால் மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசுக்கு எமது கட்சி தோளோடு தோள் நிற்கும்.

இவ்வேளையில் அரசியல் இலாபத்திற்காக அரசை இடைநடுவில் கைவிட்டு செல்வது ஆரோக்கியமானதல்ல. அரசியலை விடவும் மக்களது தேவைகளை நிறைவேற்றுவது இன்றைய அவசிய தேவையாக உள்ளதென குறிப்பிட்ட சுரேன் ராகவன் மற்றும் சுலைமா லெப்பை ஆகியோர் தமிழ் மக்களுக்கு தமது பொங்கல் மற்றும் புதுவருட வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

தமிழ், முஸ்லிம் மக்களது ஒற்றுமையான செயல்பாடுகள் எதிர்காலத்தில் இனப் பிரச்சினைக்கான தீரவைக் காண்பதற்கு பேருதவியாக இருக்கமென தெரிவித்த அவர்கள், முன்னொரு காலத்தில் வாழ்ந்தது போன்று தமிழ் முஸ்லிம் மக்கள் வடக்கு, கிழக்கு மட்டுமல்லாது முழு நாட்டிலும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து வாழ்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மை கொண்டுள்ள இந்த அரசாங்கத்தின் மூலம் தமிழ், முஸ்லிம் மக்களது பிரச்சினைகள் பலவும் தீர்க்கப்பட்டு வருகின்றன. கொரோனா காலத்தில் இவற்றில் சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும் நாடு வழமைக்குத் திரும்பியுள்ளது. அவற்றை மீண்டும் வழமைபோன்று முன்னெடுத்துச் செல்ல முடியும் எனவும் அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment