(நா.தனுஜா)
ஊழல் மோசடிகளிலும் குற்றச் செயல்களிலும் ஈடுபட்டவர்கள், கப்பம் பெற்றவர்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருக்காத அரசாங்கம், சுசில் பிரேமஜயந்த போன்ற நாட்டிற்கு நன்மையளிக்கும் விடயங்களைச் செய்யக்கூடிய ஒருவரை அவரது பதவியிலிருந்து நீக்கியிருக்கின்றது. இதன் மூலம் அரசாங்கத்தின் கொள்கைகள் என்ன? அவை யாருடைய நலனை முன்னிறுத்தியவை? என்பதை நன்கு புரிந்துகொள்ள முடிகின்றது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.
அதுமாத்திரமன்றி இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துப் பொருட்களுக்கான வரி நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது. அதன்படி வரியின்றி இறக்குமதி செய்யப்படும் பொருட்கள், நாட்டில் கட்டுப்பாட்டு விலைகள் நடைமுறையில் இல்லாத காரணத்தால் பெருந்தொகையான இலாபத்திற்கு விற்பனை செய்யப்படும். அந்த இலாபம் யாரைச் சென்றடையும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது, அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் திருப்பதி விஜயத்தின்போது பயன்படுத்தப்பட்ட ஜெட் விமானத்தின் பின்னணி குறித்த உண்மையான தகவல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
கடந்த காலத்தில் நாமல் ராஜபக்ஷ உகண்டாவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். தற்போது இந்த ஜெட் விமான விவகாரத்திலும் உகண்டாவைத் தொடர்புபடுத்திப் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன.
பால்மாவை இறக்குமதி செய்வதற்கு டொலர் இல்லாததன் காரணமாக நாட்டிலுள்ள குழந்தைகளும் சிறுவர்களும் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஜெட் விமானத்திற்காகப் பெருந்தொகையான டொலர்கள் கொடுப்பனவாகச் செலுத்தப்பட்டிருப்பின் அது குறித்து அரசாங்கம் வெட்கமடைய வேண்டும்.
அதேபோன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திருப்பதிக்குச் சென்று தனது பாவங்களை நீக்கிக் கொள்வதன் மூலம் நாட்டை மீண்டும் சுபீட்சப்பாதையில் கொண்டுசெல்லலாம் என்று கருதுவாரேயானால், அது ஒருபோதும் நிறைவேறாது என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment