(இராஜதுரை ஹஷான்)
அரசாங்கம் தவறுகளை திருத்திக் கொண்டு மக்களின் விருப்பத்திற்கமைய செயற்பட்டால் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள விளைவுகளை தவிர்த்துக் கொள்ளலாம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
மாத்தளை பகுதியில் நேற்று இடம்பெற்ற சுதந்திர கட்சியின் மாவட்ட உறுப்பினர் மாநாட்டில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அரசாங்கத்தை விமர்சித்த சுசில் பிரேமஜயந்த 24 மணித்தியாலத்திற்கு பின்னர் பதவி நீக்கப்பட்டார். கிராமிய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சல் நிமல் லன்ஷா கடந்த வாரம் நீர்க்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வினை தொடர்ந்து ஊடகங்களில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார். இதுவரையில் அவர் பதவி நீக்கப்படவில்லை.
இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஷாவை பதவி நீக்காமல் இருப்பதற்கான காரணத்தை நன்கு அறிவேன். அரசாங்கத்தின் பல விடயங்களை இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஷா நன்கு அறிவார்.
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவி நீக்குவதால் மாத்திரம் அரசாங்கத்தின் தவறான தீர்மானங்கள் சரியாகி விடாது. நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கம் தீர்வாக அமையாது.
எதிர்வரும் காலங்களில் அமைச்சர்கள் பதவி துறந்தால் அது அரசாங்கத்திற்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே அரசாங்கம் தவறுகளை திருத்திக் கொண்டு மக்களின் விருப்பத்திற்கமைய செயற்பட்டால் எதிர்காலத்தில் ஏற்படவுள்ள விளைவுகளை தவிர்த்துக் கொள்ளலாம்.
விவசாயிகள் ஆங்கிலேயர் காலத்தில் கூட இவ்வாறான துயரங்களை அனுபவிக்கவில்லை. விவசாயத்துறைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பினால் விவசாயிகள் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளின் பிரச்சினை இன்று முழு நாட்டுக்கும் தாக்கம் செலுத்தியுள்ளது என்றும் அவர் கூறினார்.
No comments:
Post a Comment