அரிசியின் விலையை அநியாயமாக உயர்த்த இடமளிக்க முடியாது : பந்துல குணவர்தன - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 12, 2022

அரிசியின் விலையை அநியாயமாக உயர்த்த இடமளிக்க முடியாது : பந்துல குணவர்தன

இவ்வருடம் முழுவதும் எக்காரணம் கொண்டும் ஒரு கிலோ நாட்டு அரிசி 105 ரூபாவிற்கு அதிகமாகவோ ஒரு கிலோ சுப்பிரி சம்பா அரிசி 130 ரூபாவிற்கு அதிகமாகவோ விற்பனை செய்யப்படமாட்டாது என்பதை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

வர்த்தக அமைச்சில் நேற்று (11) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இந்த விடயத்தை தெளிவுபடுத்தினார்.

இந்த விலையில் நுகர்வோர் சதொச மற்றும் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் அரசியை கொள்வனவு செய்ய முடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

200,000 மெட்ரிக் தொன் நாட்டு அரிசியையும், 100,000 மெட்ரிக் தொன் சம்பா அரிசியையும் இறக்குமதி செய்வதற்கு கடந்த 10 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

மியன்மாரிலிருந்து 100,000 மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அந்நாட்டு அரசாங்கத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அடுத்த மாதத்திற்குள் இந்த கையிருப்பு இலங்கைக்கு வந்து சேரும்.

மேலும், அரிசியை தனியார் துறையினூடாக இறக்குமதி செய்வது தொடர்பில் நிதி அமைச்சர் மற்றும் மத்திய வங்கியுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தனியார் துறையினரால் இறக்குமதி செய்யப்படும் அரிசியை உள்ளூர் அரிசியுடன் கலந்து உள்ளுர் சந்தைக்கு வெளியிடாமல் இருப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்க நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையுடன் இணைந்து அவதானம் செலுத்தப்படும்.

அரிசியின் விலையை செயற்கையாகவும் அநியாயமாகவும் உயர்த்தும் திட்டத்தை எக்காரணம் கொண்டும் நடைமுறைப்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது.

ஒரு கிலோ நாட்டு அரிசி 105 ரூபாவுக்கு மேல் இனி விற்பனை செய்ய முடியாது. எந்த சூழ்நிலையிலும் இந்த ஆண்டு முழுவதும் ஒரு கிலோ நாட்டு அரிசியை 105 ரூபாவுக்கும் வைத்திருப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

தமிழ் - சிங்கள புத்தாண்டுக்குள் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாவை தாண்டும் என்ற சித்தாந்தத்தை அரிசி மாபியாக்கள் உருவாக்கியுள்ளதை ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை கவனத்தில் கொண்டுள்ளது.

கொவிட் தொற்றுநோய் காலத்தில் மக்கள் எதிர்கொள்ளும் அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும் வகையில், அரிசி, சீனி, கோதுமை மா, பருப்பு, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை நிலைநிறுத்தி அவற்றை வழங்குவதற்கான பல நிவாரணத் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது.

இதேவேளை நிதி அமைச்சரின் நிவாரணப் பொதியின் கீழ், தோட்டப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு ஒரு கிலோ கிராம் கோதுமை மா 85 ரூபாவுக்கு வழங்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment