சீன உரக் கப்பலுக்கான கொடுப்பனவை தடுக்கும் இடைக்காலத் தடை நீக்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, January 3, 2022

சீன உரக் கப்பலுக்கான கொடுப்பனவை தடுக்கும் இடைக்காலத் தடை நீக்கம்

தீங்கு விளைவிக்கும் பக்டீரியாவைக் கொண்டதாகக் கூறப்படும் சீன சேதன உரக் கப்பலுக்கான கொடுப்பனவை தடுப்பது தொடர்பாக, கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவு நீக்கப்பட்டுள்ளது.

இரு தரப்பு இணக்கப்பாட்டுக்கு அமைய, கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடிவு செய்ததைத் தொடர்ந்து குறித்த இடைக்கால தடையுத்தரவை நீதிமன்றம் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

20,000 தொன் சீன சேதன உரத்தை ஏற்றியவாறு இலங்கை வந்த கப்பலில் (MV Hippo Spirit) இருந்த உரத்தில் Erwinia உள்ளிட்ட எவ்வித தீங்கு விளைவிக்கும் பக்டீரியாக்களும் இல்லையென, சிங்கப்பூரிலுள்ள SGS Testing & Contorl Services Singapore Limited நிறுவனம் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்ச்சைக்குரிய சேதன உரத்தை விநியோகித்த சீன நிறுவனம், தமது உரத்தை ஏற்க மறுத்தமை தொடர்பில் இலங்கையில் உள்ள தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவைகள் மேலதிக பணிப்பாளரிடம் இருந்து 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை கோரி அண்மையில் நஷ்டஈடு கோரிக்கை கடிதம் அனுப்பி வைத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து சட்ட மாஅதிபரின் ஆலோசனையுடன் சீன உர நிறுவனத்திற்கு 6.7மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க அரசாங்கம் முடிவு செய்திருந்ததுடன், SLSI தரநிர்ணயங்களுக்கு இணங்க சேதன உரத்தை மீள் உற்பத்தி செய்யுமாறு அந்நிறுவனத்திடம் கோரப்பட்டிருந்தது.

No comments:

Post a Comment