இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் அனைத்து தலைவர்களும் கைச்சாத்திட்டனர் என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் (ரெலோ) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இந்திய பிரதமருக்கான கடிதத்தில் 7 தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.
இன்று (11) காலை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா கைச்சாத்திட்டதோடு அனைத்து தலைவர்களும் இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் கைச்சாத்திடும் நடவடிக்கை முற்றுப்பெற்றது.
13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்களை வலியுறுத்தி எழுதியுள்ள கடிதத்தில் கையொப்பமிடும் நடவடிக்கை தற்போது முற்றுப்பெற்றுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (11) இந்த ஆவணம் கையளிக்கப்படுவதாக இருந்த போதிலும் இந்திய தூதுவர் அவசரப் பயணமாக டெல்லி சென்றிருப்பதால் அவர் திரும்பி வந்தவுடன் குறித்த ஆவணத்தை கையளிப்பதாக தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.
எதிர்வரும் 18 ஆம் திகதி குறித்த கடிதத்தை இந்தியத் தூதுவரிடம் கையளிக்க எதிர்பார்த்துள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இந்த ஆவணம் தொடர்பிலான பேச்சுவார்த்தையில் தொடர்ந்தும் இணைந்திருந்த தமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன ஆவணத்தில் கையொப்பமிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment