ஒமிக்ரோன் வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி வருகின்ற மார்ச் மாதத்துக்குள் தயாராகி விடும் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது வரை பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வைரஸ் மரபணு மாற்றம் அடைந்து உருமாறியது.
தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, நைஜீரியா ஆகிய நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா என்று பெயரிடப்பட்டன. இந்த உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் நல்ல பலன் அளிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமிக்ரோன் மற்ற உருமாறிய கொரோனா வைரஸ்களை விட மிகவும் வேகமாக பரவக் கூடியது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் ஒமிக்ரோன் வைரசுக்கு எதிராக பலன் அளிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஒமிக்ரோன் வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்தை உருவாக்கும் ஆய்வில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இதில் கொரோனா தடுப்பு மருந்து உருவாக்கிய அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் ஒமிக்ரோன் வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் ஒமிக்ரோன் வைரசை கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசி வருகின்ற மார்ச் மாதத்துக்குள் தயாராகி விடும் என்று பைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா கூறியதாவது, உலகமெங்கும் ஒமிக்ரோன் பரவல் மிக வேகமாக அதிகரித்துவரும் நிலையில், அதற்கென பிரத்யேகமாக மறுவடிவமைக்கப்பட்ட தடுப்பூசி மார்ச் மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரும்.
இது குறித்து சிஎன்பிசி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், அவர் பல முக்கியத் தகவல்களைத் தெரிவித்திருக்கிறார்.
பைசர் நிறுவனமும் அதன் கூட்டு நிறுவனமான பயோஎன்டெக் எஸ்இ நிறுவனமும் இணைந்து இந்தப் பணிகளில் இறங்கியிருக்கின்றன. ஒமிக்ரோனுக்கான பிரத்யேகத் தடுப்பூசி தயாரிப்புடன், முந்தைய இரு தடுப்பூசிகளின் செயல் திறனும், ஒமிக்ரோனை எதிர்கொள்ளும் செயல்திறனும் உள்ளடக்கிய தடுப்பூசியை உருவாக்குவதிலும் இந்நிறுவனங்கள் களமிறங்குகின்றன.
“இது நிச்சயம் சாத்தியமாகக்கூடியது என நினைக்கிறேன். அதிகச் செயல்திறன் கொண்ட தடுப்பூசிகளைத் தயாரிப்பதில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம்” என்று அந்தப் பேட்டியில் ஆல்பர்ட் போர்லா தெரிவித்திருக்கிறார்.
மறுவடிவமைக்கப்பட்ட தடுப்பூசிக்கான அங்கீகாரம் கோரி அமெரிக்காவின் சுகாதாரக் கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பிக்கப்படும் என்றும், அதிக அளவில் தடுப்பூசி உற்பத்தி செய்யும் திறனுடன் பணிகள் தொடங்கும்; இதனால், இதற்கான மாற்றுத் திட்டங்கள் தொடங்குவதில் பிரச்சினை இருக்காது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
அதைபோல் மொடர்னா நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் கூறும்போது, ‘ஒமிக்ரோன் மற்றும் மற்ற உருமாறிய கொரோனாக்களுக்கு தீர்வு காணக்கூடிய ஒரு பூஸ்டர் தடுப்பூசியை உருவாக்கி வருகிறோம். உலகெங்கிலும் உள்ள பொது சுகாதார வல்லுனர்களுடன் நாங்கள் விவாதித்து வருகிறோம். ஒரு வைரசுக்கு நாம் முன்னால் முயற்சிக்க வேண்டும். வைரசுக்கு பின்னால் இருக்கக்கூடாது’ என்றார்.
No comments:
Post a Comment